தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை
தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்வாக நடத்தப்படும் ”மாபெரும் தமிழ்க்கனவு” நிகழ்ச்சியில் மாண்புமிகு உயர் கல்வித்துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன் அவர்கள், கலந்து கொண்டு கல்வி சிறந்த தமிழ்நாடு" என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள். உயர்கல்வித்துறை சார்பில், தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்வாக நடத்தப்படும் ”மாபெரும் தமிழ்க்கனவு” நிகழ்ச்சி இன்று (28.08.2025) பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில், மாண்புமிகு உயர் கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன் அவர்கள் கலந்து கொண்டு "கல்வி சிறந்த தமிழ்நாடு" என்ற தலைப்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் சிறப்புரையாற்றினார்கள். இந்நிகழ்வில் மாண்புமிகு உயர் கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ள இந்த மாபெரும் தமிழ்க்கனவு நிகழ்ச்சியின் வாயிலாக தமிழ்நாடு அரசு மற்றும் உயர் கல்வித் துறை மாணவர்களுக்கு என்ன கருத்தினை சொல்ல வருகிறது என்பதை கல்லூரி மாணவர்கள் அனைவரும் முதலில் அறிந்து கொள்ள வேண்டும். எந்த ஒரு மொழியும் எந்த ஒரு இனமும் பல்லாண்டு காலம் சீரும் சிறப்புமாக இருக்கிறது என்றால் அந்த வரலாற்றை மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். அப்படியான ஒரு மொழி தான் தமிழ் மொழி. பல்வேறு எதிர்ப்புகளை மீறி, ஒரு மூத்த மொழியாகவும் , முதல் மொழியாகவும் தமிழ் மொழி திகழ்ந்து வருகிறது. தமிழ் மொழியில் இருக்கும் கம்பீரத்தை மாணவ, மாணவிகள் அறிந்து கொள்ள வேண்டும். உலகில் பல்வேறு மொழிகள் காணாமல் போய் உள்ளது. ஆனால் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கண்டறியப்பட்ட திருக்குறள், சிலப்பதிகாரம் உள்ளிட்ட பல்வேறு நூலகள் நம் தமிழ் மொழியில் எழுதப்பட்டுள்ளது. பல்வேறு படையெடுப்புகளுக்குப் பிறகும் இந்தியாவில் தமிழ்மொழி செம்மொழி அந்தஸ்தை பெற்று நீடித்திருக்கிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நம் தமிழ் மொழியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்காக அறிவித்த திட்டம் தான் மாபெரும் தமிழ் கனவு திட்டம். புதுமைப்பெண், தமிழ் புதல்வன், நான் முதல்வன், மாபெரும் தமிழ் கனவு போன்ற பல்வேறு திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்திய காரணத்தால் தான் இந்தியாவில் எத்தனை மாநிலங்கள் இருந்தாலும் உயர்கல்வி பயின்று வருவதில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது. அதற்காக பாடுபட்ட நிறுவனங்கள், ஒத்துழைத்த பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் பெற்றோர்கள் என அனைவரின் உழைப்பில்தான் உயர்கல்வியில் தமிழகம் முதலிடம் என்ற பெருமையை இன்று நாம் பெற்றுள்ளோம். இது ஒரு நாள் முயற்சியில் கிடைத்ததல்ல. பல வருட முயற்சியாகும். அதற்கு அடிப்படை காரணம் தமிழ் மொழியின் இரு மொழிக் கொள்கையாகும். தமிழும், ஆங்கிலமும் என்ற கொள்கையை தமிழக அரசு பின்பற்றி வருகிறது. முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்கள் கடந்த 25 வருடங்களுக்கு முன்பாகவே தகவல் தொழில்நுட்பத்துடன் கூடிய டைடல் பார்க் நிறுவனத்தை சென்னையில் உருவாக்கினார்கள். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் செய்யாத தொழில்நுட்ப புரட்சியை 25 ஆண்டுகளுக்கு முன்பே செய்துள்ளார். அதனுடைய வளர்ச்சி இன்று தகவல் தொழில்நுட்பத்திலும் தமிழ் மொழி சிறந்து விளங்குகின்றது. உலகத்தில் எந்த மொழி அதிகமாக பயன்படுத்துகிறது என்ற ஆய்வில் ஆங்கிலத்திற்கு இணையாக தமிழ் மொழி என கண்டறியப்பட்டுள்ளது. அய்யன் வள்ளுவர் எழுதிய திருக்குறளுக்கு அதிகப்படியான நபர்கள் மொழிபெயர்த்து விளக்கமளித்ததன் விளைவு, உலகத்தில் பல நூல்கள் இருந்தாலும், தற்போது திருக்குறள் உலகப் பொதுமறை நுலாக திகழ்ந்து வருகிறது. இதனால் அண்டை மாநிலத்திற்கு இல்லாத பெருமை நமது தமிழுக்கும், தமிழ் மண்ணிற்கு சேர்ந்துள்ளது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் செயல்படுத்தியுள்ள புதுமைப்பெண் திட்டத்தால் 30 சதவீத மாணவிகள் கூடுதலாக உயர் கல்வி பயின்று வருகின்றனர். ஒரு காலத்தில் பெயர்களுக்கு பின்னால் சாதிகள் இருக்கும். அண்டை மாநிலங்களில் தற்போதும் அது தொடர்ந்து வருகிறது. திராவிடத்தின் பெரும் முயற்சியால் தமிழகத்தில் தற்போது பெயர்களுக்கு பின்னால் தாங்கள் படித்து வாங்கிய பட்டங்கள் பிஏ, பிஎஸ்சி எம்ஏ என எழுதப்பட்டு வருகிறது. படித்திருந்தால்தான் பல செய்திகளை நமது அடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு செல்ல முடியும். உலகம் தோன்றி பல்லாயிரம் வருடங்களுக்கு பிறகு தான் நமக்கு கல்வி கிடைக்கின்றது. நம்முடைய முன்னோர்களுக்கு கிடைக்காத கல்வி நமக்கு கிடைத்துள்ளது என்றால் நாம் இதனை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும். இங்கு வந்துள்ள மாணவ மாணவிகள் அனைவரும் சாதிக்க பிறந்தவர்கள். நமக்கு கிடைத்திருக்கிற தமிழ் மொழி பெருமை போல் உலகில் வேறு எவருக்கும் கிடைக்கவில்லை. மிக கவனமாக இதனை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும். அறம் செய்ய விரும்பு என்ற மூன்று வார்த்தைகள் உலகை ஆச்சரியப்படுத்தி உள்ளது. இந்தப் பெருமை தமிழுக்கே உரியது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு ‘உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி, ‘தமிழ்ப் பெருமிதம்’ ஆகிய கையேடுகள் வழங்கப்படுகின்றன ‘தமிழ்ப் பெருமிதம் ’சிற்றேட்டிலுள்ள துணுக்குகளை வாசித்துச் சிறப்பாக விளக்கம் அளிக்கும் மாணவர்களைப் பாராட்டி பெருமிதச்செல்வி / பெருமிதச்செல்வன் எனப் பட்டம் சூட்டிச் சான்றிதழ்களும் பரிசும் நிகழ்வின் இறுதியில் வழங்கப்படுகிறது. சொற்பொழிவாளர்களிடம் தரமான கேள்விகளை எழுப்பும் மாணவர்களைப் பாராட்டி கேள்வியின் நாயகி / கேள்வியின் நாயகன் எனப் பட்டம் சூட்டிச் சான்றிதழும் பரிசும் வழங்கப்படுகிறது. இந்தநிகழ்வின் 50-வது சொற்பொழிவு கூட்டத்தில் கலந்துகொள்வதில் நான் பெரும் மகிழ்ச்சியடைகிறேன். கடைக்கோடியில் அமர்ந்துள்ள மாணவனை அழைத்து தமிழைப் பற்றி பேசு என கூறினால் என்னை விட சிறப்பாக பேசும் அரங்கம் இந்த அரங்கம். தமிழ் மொழி குறித்து நான் பேசியதை ஆராய்ந்து பார்த்தால் கடல் அளவில் ஒரு கை அளவே. இன்னும் அறிந்து கொள்ள வேண்டியதே கடலளவு உள்ளது. தமிழின் சிறப்பு இன்னும் மகத்தானது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். வந்தோம் சென்றோம் என்றில்லாமல் இங்கு அமைக்கப்பட்டுள்ள அரங்குகளில் சென்று மாணவர்களுக்காக தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் திட்டங்கள் குறித்து உருவாக்கப்பட்டுள்ள புத்தகங்கள் துண்டு பிரசுரங்களை மாணவர்கள் வாங்கி படித்து தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு தாய் தந்தை செய்யாததை ஒரு ஆசிரியர் செய்யாததை ஒரு கல்லூரி செய்யாததை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சிந்தித்து 2 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் 20 சொற்பொழிவாளர்களை 200 நிகழ்ச்சிகளில் பேச வைத்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். இந்த அறிய முயற்சியினை முன்னெடுத்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை மனதார வாழ்த்தி பாராட்டி மகிழ்கிறேன். நான் முதல்வன் திட்டம் செயல்படுத்துவதற்கு முன்பு தமிழகத்தில் அகில இந்திய தேர்வுகளில் 15 நபர்கள் மட்டுமே தேர்ச்சி பெறுவார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் நான் முதல்வன் திட்டம் செயல்படுத்தப்பட்ட பிறகு அகில இந்திய தேர்வுகளில் தமிழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்று வருகின்றனர். இன்னும் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இதே போன்ற ஒரு நிகழ்ச்சியில் இங்கு அமர்ந்துள்ள மாணவர்களில் ஒருவர் ஆட்சித் தலைவராக அமர வேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கம் ஆகும். இதுதான் முதற்கட்ட இலக்கு. இது தொடரட்டும். நாம் தமிழ் மொழியை பாதுகாப்போம், தமிழ் மொழியை வளர்ப்போம், மற்ற மொழிகளை விட தமிழ் மொழி தான் சிறந்தது என்று உலகிற்கு காட்ட மாபெரும் தமிழ் கனவு திட்டம் பயன்படட்டும். இவ்வாறு தெரிவித்தார். பின்னர், தமிழ்ப்பெருமிதம் சிற்றேட்டிலுள்ள குறிப்புகளை வாசித்துச் சிறப்பாக விளக்கம் அளித்த மாணவர்களைப் பாராட்டி பெருமிதச் செல்வி / பெருமிதச் செல்வன் என்ற சான்றிதழ் மற்றும் பரிசுப் புத்தகங்களையும், சிறப்பான பங்களிப்பை வழங்கும் மாணவர்களைக் பாராட்டி கேள்வியின் நாயகி / கேள்வியின் நாயகன் என்ற சான்றிதழ் மற்றும் பரிசுப் புத்தகங்களையும் மாண்புமிகு உயர் கல்வித் துறை அமைச்சர் அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆகியோர் வழங்கினார். அதனைத்தொடர்ந்து, மாணவர்களுக்குப் பயனளிக்கும் வகையில் தமிழ்ப்புதல்வன், புதுமைப்பெண், நான் முதல்வன், கல்லூரிக்கனவு, உயர்வுக்குப்படி உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தொடர்பாக அமைக்கப்பட்டிருந்த 17 அரங்குகளை மாண்புமிகு உயர் கல்வித் துறை அமைச்சர் அவர்கள் பார்வையிட்டு, அரசு திட்டங்கள் குறித்து இடம்பெற்றிருந்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும், கலந்து கொண்ட அனைத்து மாணவ,மாணவிகளுக்கும் உயர் கல்வி வேலை வாய்ப்பு வழிகாட்டி மற்றும் தமிழ் பெருமிதம் என்ற தலைப்பிலான இரண்டு புத்தகங்களையும் மற்றும் வழங்கினார். இந்நிகழ்வில், பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்கள், வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, குரும்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வேப்பூர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பெரம்பலூர் தந்தை ஹேன்ஸ் கலை அறிவியல் கல்லூரி, தந்தை ஹேன்ஸ் ரோவர் பொறியியல் கல்லூரி, வாலிகண்டபுரம் அன்னை ஆயிஷா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, பெரம்பலூர் ஸ்ரீ சாரதா மகளிர் கல்லூரி, ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி ஆகிய கல்லூரிகளை சேர்ந்த சுமார் 1500 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் மு.வடிவேல் பிரபு, கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் முனைவர்.க.ராதாகிருஷ்ணன், வருவாய் கோட்டாட்சியர் (பொ) சக்திவேல், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது)ச.வைத்தியநாதன், வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் (பொ) சேகர், தனலட்சுமி சீனிவாசன் வேளாண்மைக் கல்லூரி முதல்வர் இரா.அருள்மொழியான், அரசு மற்றும் தனியார் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவ,மாணவிகள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story






