ஆரணி அருகே தனியார் பள்ளி பேருந்து மீது அதே பள்ளி பேருந்து மோதியதில் மாணவர்கள் காயம்.

ஆரணி அருகே சீனிவாசபுரம் கூட்ரோடில் பள்ளி பேருந்து மீது மோதியதால் பேருந்து கண்ணாடி உடைந்து இருந்தது. காயமடைந்த மாணவர்கள் தச்சூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றுக்கொண்டனர்.
ஆரணி-தச்சூர் சாலையில் உள்ள சீனிவாசபுரம் கூட்ரோடில் தனியார் பள்ளி பேருந்து பிரேக் பிடிக்காமல் முன்னாள் சென்றுகொண்டிருந்த பள்ளி பேருந்து மீது மோதி விபத்து ஏற்பட்டதில் 10 கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் காயம் அடைந்து ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். ஆரணி அருகே நெசல் கிராமத்தில் விகாஸ் வித்தியாஷ்ரம் பள்ளியில் சுமார் 400 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இதில் சுற்றி உள்ள பகுதியில் இருந்து பள்ளி பேருந்துகள் மூலம் மாணவர்களை அழைத்து வருவது வழக்கம். இந்நிலையில் வியாழக்கிழமை காலை வழக்கம் போல சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து சுமார் 30 மாணவ, மாணவிகளை ஏற்றிக்கொண்டு பள்ளி பேருந்து ஆரணி- தேவிகாபுரம் சாலை சீனிவாசபுரம் கூட்ரோட்டில் சென்றது அப்போது பேருந்து ஓட்டுனர் தணிகைவேல் என்பவர் முன்னாள் சென்றுகொண்டிருந்த அதே பள்ளி பேருந்தை முந்தி செல்ல முயன்ற போது பிரேக் பிடிக்காமல் பேருந்து மீது பேருந்து மோதியது. இதில் பேருந்தில் பயணம் செய்த 5முதல் 10 வயதிற்கு உட்பட்ட 10க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் காயம் அடைந்தனர். குறிப்பாக புலவன்பாடி கிராமத்தைச் சேர்ந்த 4ம் வகுப்பு பயிலும் மோகனசுந்தரம் மகன் யுவகிருஷ்ணன்(9) மற்றும் 5ம் வகுப்பு பயிலும் முனுசாமி மகன் தருண்(10) என்பவரும் காயமடைந்தனர். மற்ற மாணவர்களுக்கு லேசான காயத்துடன் தப்பினர். அனைவருக்கும் தச்சூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளித்தனர். மேலும் சிலரை ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். பின்னர் தகவல் அறிந்து வந்த பெற்றோர்கள் மருத்துவமனையில் குவிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் பள்ளி நிர்வாகம் பெற்றோர்களுக்கு முறையான தகவல் வழங்காமல் இருந்ததை கண்டித்து பெற்றோர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்து ஆரணி கிராமிய போலீஸார் அஜாக்கிரதையாக பஸ்ஸை இயக்கிய டிரைவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story