நகர மன்ற கூட்டம்.

குமாரபாளையம் நகரமன்ற கூட்டத்தில் நகர் மன்ற தலைவர் சுகாதாரத் துறை அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு
குமாரபாளையம் நகராட்சியில் குப்பைகளை தீ வைத்து எரிப்பதால் சுகாதார சீர்கேடு எனவும், நகராட்சியில் இருப்பதில் மிகவும் மோசமான துறை சுகாதரத்துறைதான் எனவும் நகராட்சி தலைவர் சுகாதரத்துறை மீது நகராட்சி கூட்டத்தில் புகார் கூறினார். குமாரபாளையம் நகராட்சி அவசரக் கூட்டம் நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் தலைமையில் நடந்தது. புதிய ஆணையாளர் ரமேஷ் முன்னிலை வகித்தார். இதில் நடந்த விவாதங்கள் பின்வருமாறு: பழனிச்சாமி (அ.தி.மு.க.) : எண்கள் வார்டில் பல வேலைகள் நிலுவையில் உள்ளது. இன்னும் பணிகள் துவங்க கூட இல்லை. அனுமதி வழங்கி எட்டு மாதங்கள் ஆனது. பொதுமக்கள் கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை. நாங்கள் அழைப்பது குமாரபாளையம். ஆனால் அரசு சார்பில் உள்ள ஆவணங்கள் எல்லாம் கொமாரபாளையம் என உள்ளது. இதை அனைவரும் எளிதில் கையாளும் வகையில், திருத்தி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வேல்முருகன் ( தி.மு.க.) : எங்கள் வார்டில் கழிப்பறைகள் சுத்தம் செய்ய வேண்டும். மேஸ்திரி போன் போட்டு கூப்பிட்டா கூட வருவது இல்லை. அனைத்து வார்டிலும் கவுன்சிலர்கள் வசம் தினமும் கையொப்பம் பெற வேண்டும் என்று சொல்ல வேண்டும். கோவிந்தராஜ் (தி.மு.க): எங்கள் வார்டில் பல வடிகால் அமைக்க, வாட்டர் டேங்க் அமைக்க திட்ட மதிப்பீடு போட வேண்டும். சுமதி (சுயேச்சை) : எங்கள் வார்டில் ஓடை சுத்தம் செய்ய வேண்டும். குப்பை எடுக்க, சாக்கடை சுத்தம் செய்ய யாரும் வருவது இல்லை. பல முறை கேட்டும் பலனில்லை. ராஜ் ( தி.மு.க) : நகராட்சி பகுதியில் நாய்கள் அதிகம் உள்ளது. இதனை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து ஊர்களில் பிடித்து வருகிறார்கள். கதிரவன் (தி.மு.க) : சுந்தரம் நகர் பகுதியில் வடிகால் கட்டுமான பணி பாதியில் நிற்கிறது. இதனை முடித்து தர வேண்டும். அங்குள்ள நகராட்சி பள்ளி கழிவறை சீரமைக்க வேண்டும். தி.மு.க. கட்சி அலுவலகம் அருகே உள்ள கோம்பு பள்ளத்தில் நகராட்சி தூய்மை பணியாளர்கள் குப்பைகளை கொட்டி வருகிறார்கள். இதனை எச்சரிக்க வேண்டும். ரமேஷ் (ஆணையாளர்): நீங்கள் கூறிய புகார்கள் அனைத்தும் குறிப்பு எடுத்துகொண்டேன். விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். விஜய்கண்ணன் (நகராட்சி தலைவர் ) (தி.மு.க.) குமாரபாளையம் நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் ஆங்காங்கே நமது சுகாதாரத்துறை பணியாளர்கள் தீ வைத்து எரித்து வருவதாக புகார் வருகிறது. இதனை தடுக்க வேண்டும். இதனால் பலரும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். நமது நகராட்சியில் மிகவும் மோசமான துறை சுகாதாரத்துறை தான். எப்போ கேட்டாலும் பதில் தான் சொல்கிறீர்கள். வேலை ஒன்றும் நடப்பதாக தெரியவில்லை. பதில் சொல்வது விட்டு, புகார் வராமல் இருக்கும் வகையில் பணி செய்யுங்கள். மேஸ்திரிகளை அழைத்து எச்சரித்து வேலை செய்ய சொல்லுங்கள். சந்தானகிருஷ்ணன் ( சுகாதார ஆய்வாளர்) : புகார் வராதபடி பார்த்து கொள்கிறேன். இதில் 31 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மிக குறைந்த அளவிலான கவுன்சிலர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் அனைத்து கவுன்சிலர்களும் புதிய ஆணையாளருக்கு வாழ்த்து தெரிவித்தனர்
Next Story