நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட சிறப்பு மருத்துவ முகாம்

X
பெரம்பலூர் மாவட்டம் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நாளை (30.08.2025) அரும்பாவூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது - மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ் தகவல் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், நலம் காக்கும் ஸ்டாலின் என்ற புதிய முகாமினை 02.08.2025 அன்று காணொளி காட்சி வாயிலாக தமிழக முழுவதும் தொடங்கி வைத்தார்கள். இம்முகாம் பெரம்பலூர் மாவட்டத்தில் குன்னம் வட்டத்திற்குட்பட்ட துங்கபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 02.08.2025 அன்று சிறப்புடன் நடைபெற்றது இம்முகாமினை மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி சிவசங்கர் அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. ச.அருண்ராஜ் இ.ஆ.ப., அவர்கள் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.மா.பிரபாகரன் ஆகியோர் பார்வையிட்டு பொதுமக்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சிகிச்சை முறைகளை கேட்டறிந்தனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளதாவது- நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாம் பெரம்பலூர் மாவட்டத்தில், ஒரு வட்டத்திற்கு 3 முகாம்கள் வீதம் 4 வட்டத்திற்கும் 12 நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம்கள் 02.08.2025 முதல் 06.12.2025 வரை ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் (அரசு விடுமுறை நாட்கள் தவிர) அனைத்து துறைகளின் ஒருங்கிணைப்புடன் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட உள்ளது. அதன்படி வேப்பந்தட்டை வட்டத்திற்குட்பட்ட அரும்பாவூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நாளை (30.08.2025) மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் 17 உயர் சிறப்பு மருத்துவ பிரிவுகளை சார்ந்த மருத்துவர்களை கொண்டு மருத்துவ சேவைகள் வழங்கப்பட உள்ளன. மேலும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை வழங்குவதற்கும், மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்குவதற்கும் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான அடையாள அட்டை வழங்குவதற்கும் சம்பந்தப்பட்ட துறை வாயிலாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த முகாம்களில் கலந்து கொள்ளும் பொதுமக்களுக்கு முழு உடல் பரிசோதனைகள் குறிப்பாக ரத்த பரிசோதனை, சளி பரிசோதனை, இருதய பரிசோதனை (ECG & ECHO), சிறுநீரக பரிசோதனை, உயர் ரத்த அழுத்தம், காது மூக்கு தொண்டை பரிசோதனை, கண் பரிசோதனை, பெண்களுக்கான கர்பப்பை, மார்பகம் மற்றும் வாய் புற்று நோய்க்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அதற்கான ஆலோசனைகள் மற்றும் சிகிச்சைகள், பல் மருத்துவம், நீரிழிவு மருத்துவம், பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, எலும்பியல் மருத்துவம், மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவம், இதய மருத்துவம், குழந்தை மருத்துவம், நுரையீரல் மருத்துவம் / மூச்சு கோளாறு மருத்துவம், தோல் மருத்துவம், கண் மருத்துவம், காது மூக்கு தொண்டை மருத்துவம், உளவியல் மருத்துவம், இயன்முறை சிகிச்சை, ஆயுஷ் (ஆயுர்வேதம், யோகா, யுனானி, சித்தா, ஹோமியோபதி), கதிர்வீச்சு மருத்துவம் மற்றும் நரம்பியல் மருத்துவம் ஆகியவை 17 சிறப்பு மருத்துவர்கள் மூலம் வழங்கப்பட உள்ளன. எனவே பொதுமக்கள் அனைவரும் தங்கள் பகுதிகளில் நடைபெறும் உயர் சிறப்பு மருத்துவ முகாமில் கலந்து கொண்டு சேவைகளை பெற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
Next Story

