அரசுப் பேருந்து கண்ணாடிகள், ஜன்னல்களில் ஒட்டப்பட்டுள்ள விளம்பரங்களை அகற்றக் கோரி வழக்கு

X
நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தைச் சேர்ந்த பாஸ்கர் என்பவர் தாக்கல் செய்த மனுவில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில், கண்ணாடிகளிலும், ஜன்னல் கண்ணாடிகளிலும் விளம்பரங்கள் ஒட்டப்பட்டுள்ளன. இது, வெளியில் இருந்து பேருந்துகளுக்குள் பார்க்க முடியாதபடி உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார். இது, பேருந்துகளில் பயணிக்கும் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பயண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது. அனைத்து வாகனங்களின் கண்ணாடிகள், ஜன்னல் கண்ணாடிகளில் கருப்பு தாள்கள் உள்ளிட்டவற்றை ஒட்டுவதை தவிர்க்க வேண்டும் என உச்ச நீதிமன்றம், 2011-ம் ஆண்டு உத்தரவிட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை கருத்தில் கொள்ளாமல், அரசுப் பேருந்துகளில் விளம்பரங்கள் ஒட்டியுள்ளது, நீதிமன்ற அவமதிப்பு செயல். இது மோட்டார் வாகன சட்ட விதிகளுக்கு முரணானது என்றும் தெரிவித்துள்ளார். மும்பை தாக்குதல், நிர்பயா பாலியல் வன்கொடுமை சம்பவங்களை சுட்டிக்காட்டி, அரசு பேருந்துகளில் கண்ணாடிகள், ஜன்னல் கண்ணாடிகளில் ஒட்டப்பட்டுள்ள விளம்பரங்களை அகற்ற உத்தரவிட வேண்டும் என மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி சுந்தர்மோகன் அமர்வு, இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவு உள்ளிட்ட விதிகளை அமல்படுத்த எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்துள்ளது.
Next Story

