பல ஆண்டுகளாக நீடித்த பிரச்சனைக்கு சுமூக தீர்வு

பல ஆண்டுகளாக நீடித்த பிரச்சனைக்கு சுமூக தீர்வு
X
பல ஆண்டுகளாக நீடித்த பிரச்சனைக்கு சுமூக தீர்வு : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் நெகிழ்ச்சி
தங்கம்மாள்புரத்தில் கடந்த 11 ஆண்டுகளாக நீடித்து வந்த இரு சமயம் சார்ந்த பிரச்சனைக்கு "உங்களுடன் ஸ்டாலின்” முகாமில் சுமூக தீர்வு காணப்பட்டு சமய நல்லிணக்கத்திற்கான சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், சேர்வைக்காரன்மடம் ஊராட்சிக்கு உட்பட்ட தங்கம்மாள்புரம் கிராமத்தில் கடந்த 11 ஆண்டுகளாக நீடித்து வந்த மத சார்ந்த பிரச்சனை, இப்போது இரு சமய மக்களின் ஒற்றுமையால் தீர்வு கண்டுள்ளது. பத்திரகாளி அம்மன் கோவில் சப்பரம் மற்றும் பரி. பேதுரு ஆலய (கிறிஸ்தவ பள்ளி) வளாகம் தொடர்பான சர்ச்சை 2014 முதல் தொடர்ந்து வந்தது. 2017-ஆம் ஆண்டு வட்டாட்சியர் தலைமையில் சமாதான கூட்டமாக பதிவு செய்யப்பட்டிருந்தாலும், நடைமுறை சிக்கல்களால் நீண்ட காலம் தீர்வு எட்டப்படவில்லை. இந்நிலையில், கடந்த 08.08.2025 அன்று, இரு தரப்பினரும் – இந்துக் கோவில் நிர்வாகமும் கிறிஸ்தவ பள்ளி நிர்வாகமும் – தாங்களாகவே முன்வந்து சமாதான உடன்படிக்கை செய்து கையொப்பமிட்டனர். அதனைத் தொடர்ந்து, 26.08.2025 அன்று நடைபெற்ற தங்கம்மாள்புரம் பத்திரகாளி அம்மன் கோவில் சப்பரப் பவனி எந்தவித தடங்கலும் இன்றி, மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் நடைபெற்றது. இந்த வரலாற்று முக்கியமான முடிவு, 28.08.2025 அன்று நடைபெற்ற "உங்களுடன் ஸ்டாலின்” முகாமில் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா, வருவாய் தாசில்தார், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோரிடம் சமாதான உடன்படிக்கை நகல்கள் மனுவாக வழங்கப்பட்டன. இதன் மூலம் 2017-ஆம் ஆண்டின் பழைய சர்ச்சைக்குரிய சமாதான கூட்டத்தை ரத்து செய்யும் நடவடிக்கையும் தொடங்கப்பட்டது. நிகழ்வில் ஒரு நெகிழ்ச்சியான சூழ்நிலை நிலவியது. "இனி எந்தவித முரண்பாடுகளும் இன்றி சகோதரத்துவத்துடன் வாழ்வோம்” என்று இருதரப்பினரும் உறுதியளித்தனர். நிகழ்வில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா, "தங்கம்மாள்புரம் கிராம மக்கள், இரு சமய தலைவர்கள் இணைந்து எடுத்த இந்த முடிவு தூத்துக்குடி மாவட்டத்திற்கு மட்டுமல்லாமல், தமிழகத்திற்கே ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். முதல்வர் சமூக நல்லிணக்கத்திற்கான கோரிக்கையை நிறைவேற்றுவார். இந்த நல்லிணக்கம், இளைஞர்கள் மற்றும் எதிர்கால தலைமுறைக்கு முன்மாதிரியாக திகழும்” என்று தெரிவித்தார். இருதரப்பினரும் சட்டமன்ற உறுப்பினருக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும், மனுவை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வருவாய் அதிகாரிகளிடம் சண்முகையா எம்.எல்.ஏ வலியுறுத்தினார். இந்த நிகழ்ச்சியில், சேர்வைக்காரன்மடம் கிராம நிர்வாக அலுவலர், புதுக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் பானு, ஊராட்சி செயலர் மாரியம்மாள், சேர்வைக்காரன்மடம் முன்னாள் ஊராட்சி உபதலைவர் ஏஞ்சலின் ஜெனிட்டா ஆகியோர் கலந்து கொண்டனர்.
Next Story