தஞ்சாவூரில், பயணிகள் ரயிலில் தண்ணீர் குழாய்களை திருடிய இளைஞர் கைது...

X
தஞ்சாவூரில் நின்று கொண்டிருந்த பயணிகள் ரயில் ஒன்றில் தண்ணீர் குழாய்களை திருடிய இளைஞரை காவல்துறையினர் கைது செய்து அவரிடமிருந்து 5 தண்ணீர் குழாய்களை மீட்டனர். ரயில் நிலையங்களில் குற்ற நிகழ்வுகளை தடுக்கவும், ரயில்வே பொருட்கள் திருடு போவதை தடுக்கும் வகையிலும், கண்காணிப்பு கேமராக்களை பொருத்த தெற்கு ரயில்வே முதன்மை தலைமை பாதுகாப்பு ஆணையர் கே.அருள்ஜோதி உத்தரவின் பேரில் ரயில் நிலையங்களில் ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதே போல், தஞ்சாவூர் ரயில் நிலையத்திலும் மூத்த பிரிவு பாதுகாப்பு ஆணையர் பிரஷாந்த் யாதவ் மேற்பார்வையில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, அவை 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சனிக்கிழமையன்று தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் நான்காவது நடை மேடையில், நின்று கொண்டிருந்த ஒரு ரயில் பெட்டியில் ஏறும் இளைஞர் ஒருவர் பெட்டியில் கழிவறை மற்றும் கைகழுவும் இடத்தில் உள்ள தண்ணீர் திறக்கும் குழாயை திருடியது தெரியவந்தது. அவர் ரயில் பெட்டியில் ஏறுவதும், இறங்குவதுமாக இருந்த செயல் கண்காணிப்பு கேமராவில் பதிவானது. இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த தஞ்சாவூர் ரயில்வே பாதுகாப்பு படை பிரிவு காவல்துறையினர், அந்த இளைஞரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்த போது, அவர் சேலம் மாவட்டத்தைச் சே்ரந்த முருகன் என்பரின் மகன் விக்னேஸ்வரன் (20) என்பது தெரியவந்தது. மேலும், அவர் வைத்திருந்த பிளாஸ்டிக் பையை சோதனையிட்டபோது, அதில் 5 எண்ணிக்கையிலான தண்ணீர் குழாய்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் குற்றவியல் நீதித்துறை நடுவர் முன் ஆஜர்படுத்தி 15 நாட்கள் சிறையில் அடைத்தனர்.
Next Story

