சேலத்தில் கஞ்சா விற்ற அண்ணன், தம்பி கைது

X
சேலம் அன்னதானப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அர்த்தனாரி தலைமையில் போலீசார் அன்னதானப்பட்டி முழுவதும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அகரம் பகுதியில் போலீசார் வாகன சோதனை நடத்தி கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக 3 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். போலீசார் நிற்பதை பார்த்ததும் மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் திடீரென கீழே குதித்து தப்பி ஓடினார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் மோட்டார் சைக்கிளில் வந்த மற்ற 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் அதே பகுதியை சேர்ந்த ரஞ்சித்குமார் மகன்கள் சபரிஷ் (23), ஹரிஷ் (20) என்பது தெரிந்தது. மேலும் அவர்கள் வைத்திருந்த ஒரு பையில் போலீசார் சோதனை நடத்தினர். அதில் 1¾ கிலோ கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்தது தெரிந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அண்ணன், தம்பிகள் 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து தப்பி ஓடி தலைமறைவான மேலும் ஒருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.18 ஆயிரம் ஆகும்.
Next Story

