தஞ்சாவூரில் அனுமதியின்றி இயங்கி வந்த உர விற்பனை நிலையத்துக்கு சீல்: வேளாண்மை துறையினர் நடவடிக்கை

X
தஞ்சாவூரில் அனுமதியின்றி இயங்கி வந்த தனியார் உர விற்பனை நிலையத்துக்கு வேளாண்மை துறையினர் சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர். தஞ்சாவூர் கொடிமரத்து மூலை பகுதியில் தனியார் உர விற்பனை நிலையம் ஒன்று உரிய அனுமதியின்றி செயல்படுவதாக வேளாண்மைத் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து தஞ்சாவூர் மாவட்ட வேளாண்மை துறை உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு) எஸ்.செல்வராஜ் தலைமையில், தர ஆய்வாளர் தினேஷ்குமார் மற்றும் வேளாண்மை துறையினர் திங்கள்கிழமை பிற்பகல் திடீரென ஆய்வு செய்தனர். அப்போது தஞ்சாவூர் வடக்கு ஆஜாரத்தை சேர்ந்த கமலக்கண்ணன் என்பவர் எந்தவித உரிமமும் இல்லாமல், கொடிமரத்து மூலையில் உர விற்பனை நிலையத்தை நடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த விற்பனை நிலையத்தை வேளாண்மைத்துறையினர் மூடி சீல் வைத்தனர். இதுகுறித்து வேளாண்மைத்துறை அதிகாரிகள் கூறியது: கண்ணன் என்பவர் வயலூரில் உரக்கடை நடத்த அனுமதி பெற்று அங்கு நடத்தி வருகிறார். அதே போல் கொடிமரத்து மூலையில் எந்த வித உரிமம், ஜிஎஸ்டி எண் பெறாமல் உரக்கடை நடத்தி வந்துள்ளார். இந்த கடையில் தற்போது யூரியா, டிஏபி, பொட்டாஷ், காம்பளக்ஸ், உயிர் உரங்கள் என 40 டன் அளவுக்கு இருப்பு உள்ளது. உரிய அனுமதியின்றி செயல்பட்டு வந்த இந்த உர விற்பனை நிலையத்தை தற்போது சீல் வைத்து மூடப்பட்டுள்ளது" என்றனர்.
Next Story

