தஞ்சையில், காலி  மதுபாட்டில்கள் திரும்பப்பெறும் திட்டத்தில் டாஸ்மாக் ஊழியர்களை பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

போராட்டம்
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் காலி மதுபான பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம்  உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஏற்கனவே திருவாரூர், நாகை, தேனி, கன்னியாகுமரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் நடைமுறையில் உள்ளது . இந்த நிலையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 137 டாஸ்மாக் கடைகளில் காலி மதுபான பாட்டில்கள் திரும்பப்பெறும் திட்டம்  திங்கள்கிழமை முதல் அமலுக்கு வருவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது. இந்தத் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகளில் விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு மது பாட்டில்களையும் விற்பனை செய்யும்போது அதிகபட்ச சில்லறை விற்பனை விலையுடன் சேர்த்து கூடுதலாக ரூ.10 வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறப்படும்.  அவ்வாறு வாடிக்கையாளர்கள் மதுபானக் கடைகளில் இருந்து வாங்கும் மது பாட்டில்களை அதில் ஒட்டப்பட்டு இருக்கும் ஸ்டிக்கரோடு வாங்கிய மதுபானக் கடைகளில் காலியாக திரும்ப ஒப்படைக்கும்போது ஏற்கனவே பெறப்பட்ட ரூ.10 திரும்ப வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும். இந்த நிலையில் காலி மது பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்திற்கு டாஸ்மாக் ஊழியர்களை பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தஞ்சை மாவட்டத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வந்தனர். ஞாயிற்றுக்கிழமை கருப்பு சின்னம் அணிந்து எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், திங்கட்கிழமை காலை தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சிப்காட்டில் உள்ள டாஸ்மாக் மேலாளர் அலுவலகம் முன்பு பாட்டில்களில் ஒட்டுவதற்காக   வழங்கப்பட்ட ஸ்டிக்கர்களை திரும்ப ஒப்படைக்கும் போராட்டத்தில் அனைத்து டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டுக் குழுவினர் ஈடுபட்டனர்.  அப்போது காலி மது பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தில் டாஸ்மாக் ஊழியர்களை பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்கள் எழுப்பினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட டாஸ்மாக் ஊழியர்களிடம்  டாஸ்மாக் மேலாளர் மற்றும் அல்வலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், தற்காலிகமாக இத்திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டதையடுத்து, 1.45 மணி நேரம் கழித்து மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டது. இதுகுறித்து டாஸ்மாக் ஊழியர்கள் கூறும்போது :- டாஸ்மாக் கடைகளில் மதுவாங்கி குடிப்பவர்களில் பலர் மது அருந்திவிட்டு  காலி பாட்டில்களை விளை நிலங்கள் மற்றும் ஆங்காங்கே வீசிவிட்டு செல்கின்றனர். இதனால் பலர் பாதிக்கப்பட்டு வந்தனர். இதனை தடுக்க  காலி மது பாட்டில்களை  திரும்ப பெறும் திட்டம்  கொண்டுவரப்பட்டது. இந்த திட்டத்தை நாங்கள் முழு மனதாக வரவேற்கிறோம்.  ஆனால் காலி பாட்டில்களை திரும்ப பெறுவதற்கு எங்களை பயன்படுத்துவதற்கு தான் எதிர்ப்பு தெரிவிக்கிறோம்  . ஏனென்றால் டாஸ்மாக்கில் ஊழியர்கள் பற்றாக்குறை, பணிச்சுமை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் உள்ளது. எனவே காலி பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தில் ஊழியர்களை பயன்படுத்தாமல் மாற்று வழியில் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் . அதுவரை எங்களது போராட்டம் தொடரும்" என்றனர். டாஸ்மாக் ஊழியர்களின் தொடர் போராட்டத்தால் மாவட்ட மேலாளர் அலுவலகம் முன்பு காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டிருந்தது .
Next Story