மருத்துவ சிகிச்சைக்காக பயனாளிகளுக்கு ஆட்சியர் நிதியுதவி

X
தஞ்சாவூரில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்விக் கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 501 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்கள். மேலும், மாவட்ட ஆட்சியரின் தன்விருப்ப நிதியிலிருந்து பட்டுக்கோட்டை வட்டம் அதிராம்பட்டினம் பிலால் நகரைச் சேர்ந்த தஎம்.முகம்மது இஸ்மாயில் என்பவரின் இருதய நோய் மருத்துவ சிகிச்சை மற்றும் வாழ்வாதாரத்திற்காக ரூபாய் 15,000 க்கான காசோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார். முன்னதாக, பள்ளிக் கல்வித்துறை சார்பில் 234 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவியர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெறும் வகையில் மாணவ-மாணவியர்களுக்கான "கற்றல் கையேட்டினை" தலைமையாசிரியர்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார். இக்கூட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் எம்.செல்வம், சமூக பாதுகாப்புத் திட்டம் தனித்துணை ஆட்சியர் பெ.மணிமாறன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ரவிச்சந்திரன், பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ஸ்ரீதர் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story

