புவிசார் குறியீடு பெற்ற மணப்பாறை முறுக்குக்கு தனி முத்திரை வெளியீடு

X
தஞ்சாவூரில், புவிசார் குறியீடு பெற்ற மணப்பாறை முறுக்குக்கு தனி முத்திரை திங்கள்கிழமை வெளியிடப்பட்டு, பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இந்த முத்திரையை அறிவுசார் சொத்துரிமை வழக்குரைஞர் சங்கத் தலைவர் ப.சஞ்சய் காந்தி வெளியிட்டு, செய்தியாளர்களிடம் தெரிவித்தது: திருச்சி மாவட்டம், மணப்பாறை முறுக்கு தனிச் சிறப்பான சுவையுடைய, அனைவராலும் விரும்பப்படும் நொறுக்குத் தீனி. பரம்பரை குடிசைத் தொழிலாக வளர்ந்துள்ள இந்த மணப்பாறை முறுக்கை சட்ட ரீதியாக பாதுகாப்பதற்காக, அது குறித்து சுலோச்சனா - பன்னீர்செல்வம் அறிவுசார் சொத்துரிமை விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டு மையம் ஆய்வு செய்தது. இதனுடைய தனித்துவம், தனி வரலாறு, சிறப்பு, தயாரிக்கும் முறை, விற்பனை முறை ஆகியவற்றுடன் புவிசார் குறியீடு பெறுவதற்காக 2014 ஆம் ஆண்டில் விண்ணப்பிக்கப்பட்டது. இதையடுத்து, 2023 ஆம் ஆண்டில் மணப்பாறை முறுக்குக்கு புவிசார் குறியீடு அறிவிக்கப்பட்டது. தற்போது இதற்கான தனி முத்திரை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் முழுப் பயனையும் பாரம்பரிய முறுக்கு தயாரிப்பாளர்கள் பெறும் வகையில், இந்தத் தனி முத்திரை வெளியிடப்பட்டுள்ளது. விற்பனை செய்யப்படும் அனைத்து மணப்பாறை முறுக்கு பாக்கெட்டுகளிலும் இந்தத் தனி முத்திரை இடுவதன் மூலம் போலிகள் நுழைவதைத் தடுக்க முடியும். இதனால், நுகர்வோர்களும் சரியான நபரிடம் தரமான பொருளைக் கண்டறிந்து வாங்குவர். இதன் மூலம் உண்மையான பாரம்பரிய தயாரிப்பாளருக்கு விற்பனை அதிகரித்து, உரிய அங்கீகாரம் கிடைக்கும். இந்தப் பெயரையோ, முத்திரையையோ வேறு யாரேனும் தவறாக பயன்படுத்தினால், அவர்கள் மீது சட்டப்படி குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். விரைவில் சீரகச் சம்பாவுக்கு...: மேலும், சீரகச் சம்பா, தஞ்சாவூர் கண்ணாடி கலைப்பொருட்கள் (கட் கிளாஸ் வொர்க்), திருவாவடுதுறை சீவாலி, சிவகாசி பட்டாசு, சிவகாசி தீப்பெட்டி ஆகிய 5 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற விண்ணப்பிக்கப்பட்டுள்ளதால், அவற்றுக்கும் விரைவில் கிடைத்துவிடும்" என்றார் சஞ்சய்காந்தி. அப்போது, மணப்பாறை முறுக்கு தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர் சங்கத்தைச் சார்ந்த சேகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Next Story

