பால்வண்ண நாத சுவாமி கோயிலில் ஆவணி தவசு திருவிழா தேரோட்டம்

X
தென்காசி மாவட்டம் கரிவலம்வந்த நல்லூரில் அருள்மிகு ஒப்பனையம்மாள் சமேத பால்வண்ணநாத சுவாமி கோயில் அமைந்துள்ளது. சங்கரன் கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலின் துணை கோயிலாகும். இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி தவசு ஆவணி மாதம் நடைபெறுவது வழக்கம். தொடர்ந்து 14 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் அம்பாள் தினமும் காலை, மாலை இருவேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வருவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை அம்பாள் சன்னதி முன்பு உள்ள கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் 11ம் திருநாளான செப்டம்பர் 1 ஆம் தேதி நேற்று மாலை 6.00 மணிக்கு நடைபெற்றது. இதனை முன்னிட்டு தேர் நிலையத்தில் இருந்து புறப்பட்டு நான்கு ரதவீதி வழியாக மீண்டும் நிலையத்தை வந்தடைந்தது. இதில் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பக்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சிகர நிகழ்ச்சியான ஆவணித்தபசு 13ம் திருநாளான செப் 3 ஆம் தேதி (நாளை) புதன்கிழமை நடக்கிறது. இதனை முன்னிட்டு நாளை காலை 10.00 மணிக்கு சுவாமி. அம்பாள். முகலிங்கநாதருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெறுகிறது.மதியம் 2.30 மணிக்கு மேல் ஸ்ரீ ஒப்பனை அம்பாள் தவசு மண்டபத்திற்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும், தொடர்ந்து மாலை 5.00 மணிக்கு மேல் 6.00 மணிக்குள் ஸ்ரீ ஒப்பனை அம்பாளுக்கு ரிஷபவாகனத்தில் முகலிங்க நாதர் வடிவமாக காட்சி கொடுக்கும் நிகழ்ச்சியும், இரவு 10.00 மணிக்கு மேல் ஸ்ரீ ஒப்பனை அம்பாளுக்கு யானை வாகனத்தில் ஸ்ரீ பால்வண்ணநாதர் காட்சி கொடுக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. விழாவின் கடைசி நாளான 14 ஆம் திருநாளான செப் 4 ஆம் தேதி வியாழக்கிழமை (நாளை மறுநாள்) இரவு 7 மணிக்கு மேல். சுவாமி அம்பாள் சப்தா வர்ணம் சப்பரம் ரத வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்து வருகின்றனர்.
Next Story

