தஞ்சாவூர் தற்காலிக மீன் சந்தைக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக வியாபாரிகள் புகார்

X
தஞ்சாவூர் கீழ்அலங்கம் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில், தகரக் கொட்டகை, சிமென்ட் தளம் அமைக்கப்பட்டு 56 கடைகள் கொண்ட தற்காலிக மீன் சந்தை செயல்பட்டு வருகிறது. மேலும், 60 சிறிய தரைக்கடைகள் உட்பட மொத்தம் 116 கடைகள் உள்ளன. இந்நிலையில், ஒப்பந்தக்காரர் கடை ஒன்றுக்கு நாள்தோறும் ரூ.100 வசூல் செய்து வந்தார். தற்போது அதனை ரூ.150 ஆக அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு மீனவியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து, ஒப்பந்தக்காரர் மீன் சந்தைக்கான மின் கட்டணத்தை செலுத்தாமல் விட்டதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால், சில கடைகளில் வியாபாரிகள் கடந்த ஒரு வாரமாக ஜெனரேட்டர் பயன்படுத்தும் அவலத்தில் உள்ளனர். இதுகுறித்து வியாபாரிகள் மாநகராட்சி ஆணையர் கண்ணனிடம் புகார் மனு அளித்து, “ஒப்பந்தக்காரர் மாநகராட்சி நிர்ணயித்த தொகையை விட கூடுதலாக வசூலிக்கிறார். உடனடியாக மின் கட்டணம் செலுத்த வேண்டும். அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து மீனவியாபாரிகள் மேலும் தெரிவித்ததாவது: “தற்காலிக மீன் சந்தையில் 56 கடைகளும், 60 தரைக்கடைகளும் உள்ளன. மாநகராட்சி கடை ஒன்றுக்கு நாள் வாடகையை ரூ.40 என நிர்ணயித்துள்ளது. ஆனால் ஒப்பந்தக்காரர் ரூ.100 வரை வசூலிக்கிறார். தண்ணீர் வசதி இல்லை. கழிவுகளை சுத்தம் செய்யாததால் துர்நாற்றம் வீசுகிறது. புழுக்கள் உருவாகின்றன. கழிவறை வசதி இல்லாமல், தற்காலிகமாக வைக்கப்பட்ட கழிவறை குப்பை சேமிப்பிடமாக மாறியுள்ளது. அதிக கட்டணம் குறித்து கேள்வி கேட்டதற்காக மின் கட்டணத்தை எங்களை கட்டச் சொல்கிறார். மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் ஜெனரேட்டரை பயன்படுத்த ரூ.1,000 வரை செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தனர்.
Next Story

