கிராம மக்கள் சாலை மறியல்: பஸ்கள் நின்று செல்ல வலியுறுத்தல்!

X
தூத்துக்குடி அருகே உள்ள பொட்டலூரணி விலக்கில் பஸ்கள் நின்று செல்ல வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தூத்துக்குடி அருகே உள்ள பொட்டலூரணி விலக்கில் அரசு பஸ்கள் நிற்காமல் சென்று வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் சிரமப்பட்டு வந்தனர். இந்த நிலையில் பொட்டலூரணி கிராம மக்கள் நேற்று மதியம் திடீரென நெல்லை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை அப்புறப்படுத்த முயன்ற போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதமும் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து தூத்துக்குடி அரசு போக்குவரத்து கழக கோட்ட மேலாளர் ரமேஷ், தூத்துக்குடி கோட்டாட்சியர் பிரபு, தாசில்தார் முரளிதரன், ஊரக டிஎஸ்பி சுதீர் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, 3 நாட்களுக்குள் பஸ்கள் பொட்டலூரணி விலக்கில் நின்று செல்ல உத்தரவு பிறப்பித்து, பஸ்களை நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த காரணமாக சுமார் 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Next Story

