லோடுவேன் - கன்டெய்னர் லாரி நேருக்குநேர் மோதல்

லோடுவேன் - கன்டெய்னர் லாரி நேருக்குநேர் மோதல்
X
பழையகாயல் அருகே லோடு வேன் டயர் வெடித்து எதிரே வந்த கன்டெய்னர் லாரி மீது மோதிய விபத்தில், 2 வாகனங்களும் சாலையில் கவிழ்ந்ததால் தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தூத்துக்குடி அருகேயுள்ள தருவைகுளத்தில் இருந்து புன்னக்காயலில் மீன் ஏற்றுவதற்காக நேற்று காலையில் கன்டெய்னர் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த லாரியை ராமநாதபுரம் மாவட்டம் கடுகுசந்து சத்தியத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் மாரி (42) ஓட்டி வந்தார். இந்த லாரி தூத்துக்குடி-திருச்செந்தூர் பிரதான சாலையில் பழையகாயல் அருகே வந்து கொண்டிருந்தபோது எதிரே ஏரலில் இருந்து செங்கல் ஏற்றி கொண்டு லோடு வேன் ஒன்றுவந்து கொண்டிருந்தது. இந்த வேனை ஆலடியூர் குலவேளாளர் தருவை சேர்ந்த சுப்பையா மகன் சிவகுமார் (26) ஓட்டி வந்தார். சுமார் 7.30 மணியவளில் பழையகாயல் அருகேயுள்ள ராமச்சந்திராபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, லோடுவேன் முன்பக்க டயர் திடீரென வெடித்தில், தாறுமாறாக ஓடி எதிரே வந்த கன்டெய்னர் லாரி மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கன்டெய்னர் லாரியும், லோடுவேனும் சாலையில் கவிழ்ந்தன. கன்டெய்னர் லாரி டிரைவர் மாரியும், லோடுவேன் டிரைவர் சிவகுமாரும் காயத்துடன் தப்பினர். கன்டெய்னர் லாரியும், லோடு வேனும் சாலையில் கவிழ்ந்து கிடந்ததால், தூத்துக்குடி-திருச்செந்தூர் பிரதான சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு ஆத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், சப்-இன்ஸ்பெக்டர் முரளி மற்றும் போலீசார் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், தூத்துக்குடியில் இருந்த வந்த வாகனங்கள் கோவங்காடு, ஏரல் வழியாகவும், திருச்செந்தூரில் இருந்து வந்த வாகனங்கள் மஞ்சள்நீர்காயல், ஏரல் வழியாகவும் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. தொடர்ந்து சாலையில் கிடந்த வாகனங்கள் அப்புறப்படுத்திய பின்னர் போக்குவரத்து சீரானது. இந்த விபத்தால் தூத்துக்குடி-திருச்செந்தூர் பிரதான சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story