உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி ,பார்வையிட்டு, பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
ஆலத்தூர் வட்டத்திற்குட்பட்ட அல்லிநகரம் கிராமத்தில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி ,பார்வையிட்டு, பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டத்திற்குட்பட்ட அல்லிநகரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இன்று (02.09.2025) நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்து, மனு அளிக்க வருகை தந்த பொதுமக்களிடம் கோரிக்கைகள் மற்றும் தேவைகள் தொடர்பாக கேட்டறிந்தார். உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்களில் வருவாய்த்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, வேளாண்மைத்துறை, இ-சேவை மையம், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டம், தொழிலாளர் நலத்துறை உள்ளிட்ட 15 அரசுத்துறைகள் பங்கேற்று 46 சேவைகளை பொதுமக்களுக்கு வழங்கிட ஏதுவாக இத்திட்டம் செயல்படுத்தப்படுகின்றது. அல்லிநகரம் கிராமத்தில் நடைபெற்ற முகாமினை பார்வையிட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், பொதுமக்கள் அளித்துள்ள மனுக்கள் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளதா என்றும், முகாமிற்கு வருகை தரும் பொதுமக்களுக்கு போதிய அடிப்படை வசதிகளும், தொடர்புடைய துறைகளுக்கு செல்வது தொடர்பாக மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலமாக வழிகாட்டிடவும், பெறப்படும் மனுக்களை உடனடியாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளவும் போதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா என பார்வையிட்டு ஆய்வு செய்தார். இன்றைய முகாமில் கோரிக்கை மனு கொடுத்தவர்களில் 5 பயனாளிகளுக்கு பட்டா மாற்றத்திற்கான ஆணையினையும், 3 கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்துப் பெட்டகங்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். இந்நிகழ்வுகளில், சமூகப்பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் சிவக்கொழுந்து, ஊராட்சிகளுக்கான உதவி இயக்குநர் மோ.செல்வம், ஆலத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயபால், பிரேமலதா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story




