அரியலூரில் பொதுப் பாதைக் கேட்டு நடந்த போராட்டம்: பேச்சுவார்த்தைக்கு அழைத்த மாவட்ட ஆட்சியர்: இரண்டு மாத கால அவகாசத்திற்குள் பாதை மீட்டுத் தர உறுதி :

X
அரியலூர், செப்.4- அரியலூரில் வாரச்சந்தை அருகில் செட்டி ஏறி தென்புறம் உள்ள பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்த பொது பாதையை மீட்டு மீண்டும் பொதுமக்கள் பயன்படுத்த நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட கலெக்டர் பெ.ரத்தினசாமி உறுதியளித்துள்ளார். அரியலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் தலைமையில் புதன்கிழமை அன்று நடைபெற்ற பொதுப் பாதையை மீட்கும் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் உள்ளிட்ட பொதுமக்கள், குடியிருப்பு வாசிகள் என 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு இரவு முழுவதும் காத்திருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர். அரியலூர் மாவட்டம் அரியலூர் வாரச்சந்தை அருகில் செட்டி ஏரியை ஒட்டி இருந்த வண்டிப்பாதையை தென்புறம் பகுதி பொதுமக்கள் கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு மாவட்ட காவல் துறை குடியிருப்பு வளாகம் கட்டப்பட்ட நிலையில் அதுவரை பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பொதுப்பாதையை காவல்துறை பயன்பாட்டிற்கு வருவாய் துறையினர் மாற்றம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏற்கனவே இந்த வண்டிப்பாதையை பயன்படுத்தி வந்த பொதுமக்கள் காவலர் குடியிருப்புக்கு பின்புறத்தில் நிலம் வைத்துள்ள விவசாயிகள் மற்றும் 70-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அந்த பொதுப் பாதையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. எனவே வண்டிப்பாதையை காவல்துறை பயன்பாட்டிற்கு கொடுத்ததை ரத்து செய்து எப்போதும் போல பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பல கட்ட போராட்டங்கள் நடந்தது. எனினும் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வந்தனரே தவிர எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் பொது பாதையை மீட்கும் போராட்டத்தை குடியிருப்பு வாசிகள் அறிவித்திருந்தனர். மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம் அவர்கள் போராட்டத்திற்கு தலைமை ஏற்க 300 -க்கும் மேற்பட்டோர் பிரச்சனைக்குரிய இடத்திற்கு முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும், பேரணி செல்வது எனவும், மேலும் சம்பந்தப்பட்ட இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை தாமே முன்னின்று அகற்றுவது எனவும் தீர்மானித்திருந்த நிலையில் போலீஸார்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டனர். மேலும் அரியலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் கோவிந்தராஜ் தலைமையில் பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்தனர். இதையடுத்து பேச்சுவார்த்தைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் குடியிருப்பு வாசிகள் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் கோவிந்தராஜ் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டாத நிலையில் தொடர்ந்து கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு முன்பாக 300-க்கும் மேற்பட்டோர் காலை முதல் இரவு வரை அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அதிகாரிகள் யாரும் பேச்சுவார்த்தைக்கு வராத நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பே சண்முகம் அவர்கள் உரிய தீர்வு எட்டப்படாத வரை இந்த இடத்தை விட்டு நகர மாட்டோம் என உறுதியாக காத்திருப்பு போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டிருந்தனர். அப்போது மாவட்ட ஆட்சியர் முறையாக இந்த பொதுப் பாதை சம்பந்தமாக அழைத்து பேச வேண்டும், இல்லையேல் மாவட்ட ஆட்சியர் பொதுமக்களிடத்தில் நேரடியாக வந்து உரிய பதிலை கூற வேண்டும் என உறுதியாக இருந்த நிலையில் தகவல் அறிந்த அரியலூர் மாவட்ட ஆட்சியர் பொ.ரத்தினசாமி தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை அழைப்பு விடுக்கப்பட்டது. இதனிடையே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்டோரை அலுவலகத்திற்கு முன்பாகவே அமர வைத்துவிட்டு பத்து பேர் மட்டுமே பேச்சுவார்த்தைக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ சண்முகம் அவர்கள் மற்றும் கட்சியின் தமிழ் நாடு மாநில குழு உறுப்பினரும் திருச்சி பதிப்பு தீக்கதிர் பொறுப்பாளருமான ஐ.வி.நாகராஜன், அரியலூர் மாவட்ட செயலாளர் எம்.இளங்கோவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.மணிவேல், டி.அம்பிகா, கே.கிருஷ்ணன், ஏ.கந்தசாமி , மூத்த தோழர் சிற்றம்பலம் மற்றும் குடியிருப்பு வாசிகள் உள்ளிட்ட 10 பேர் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் மாவட்ட ஆட்சியர் பொ.ரத்தினசாமி கூறும்போது நிர்வாக ரீதியான சில தலையீடுகள் இருப்பதாகவும், சட்டரீதியான சில சிக்கல்கள் இருப்பதாகவும் இது சம்பந்தமாக காவல்துறை தலைவருக்கு கடிதம் அனுப்பி வைத்ததாகவும், இரண்டு மாத அவகாசத்திற்குள்ளாக இந்த பொது பாதைக்கான நடவடிக்கையை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுத்து பாதையை மீட்டுத் தருவதாக உறுதி அளித்தார். இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அளித்த வாக்குறுதியை ஏற்று இரண்டு மாத காலத்திற்குள் பொது பாதையை மீட்டு தர நடவடிக்கை எடுத்து பொதுமக்களின் பொதுப் பாதையை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.அவ்வாறு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மிகப்பெரிய அளவில் பொதுமக்களை ஒன்று திரட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என தெரிவித்தனர். பின்னர் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு முன்பாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் குடியிருப்பு வாசிகளிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம் அவர்கள் மாவட்ட ஆட்சியர் கூறியதை தெரிவித்தார். மேலும் தற்பொழுது தற்காலிகமாக இந்தப் போராட்டத்தை கைவிடுவதாகவும் அவர் தெரிவித்தார். இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் குடியிருப்பு வாசிகள் காத்திருப்பு போராட்டத்தை கைவிட்டு களைந்து சென்றனர்.காலை முதல் இரவு வரை காக்க வைத்து அதிகாரிகள் அலட்சியம் செய்வது குறித்து கண்டனம் தெரிவிக்கப்பட்டது. காலையிலேயே வந்து பேச்சுவார்த்தை நடத்தி இருந்தால் போலீஸாருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் குடியிருப்பு வாசிகளுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு இருக்காது.மேலும் இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் குடியிருப்பு வாசிகள் சிலர் காயமடைந்தது வேதனை தெரிவிப்பதாக அவர் தெரிவித்தார்.போராட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.கிருஷ்ணன்,துரை அருணன், பி துரைசாமி,ஒன்றிய செயலாளர்கள் அஅருண்பாண்டியன், ஜெ.ராதாகிருஷ்ணன், கு.அர்ச்சுனன், எஸ்.பி.சாமிதுரை, வேல்முருகன், ஆர்.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட பொதுமக்கள் குடியிருப்பு வாசிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
Next Story

