தஞ்சாவூர் பூம்புகார் விற்பனை நிலையத்தில் கொலு பொம்மைகள் விற்பனை துவக்கம்

X
இந்துக்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாக திகழும் நவராத்திரி பண்டிகை ஆண்டுதோறும் 9 நாட்களுக்கு கொண்டாடப்பட்டு வருகிறது. நவராத்திரி பண்டிகையில் கொலு பொம்மைகள் வைத்து வழிபாடு நடத்துவது பிரதானமாக விளங்குகிறது. இந்த ஆண்டு நவராத்திரி பண்டிகை வருகிற 22- ஆம் தேதி முதல் அடுத்த மாதம் (அக்டோபர்) 1- ஆம் தேதி தேதி வரை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தஞ்சாவூர் பூம்புகார் விற்பனை நிலையத்தில் கொலு பொம்மைகள் கண்காட்சி மற்றும் விற்பனை புதன்கிழமை தொடங்கியது. இந்த கண்காட்சியை மாவட்ட உதவி ஆட்சியர் (பயிற்சி) கார்திக் ராஜா குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து, காட்சிப்படுத்தி இருந்த கொலு பொம்மைகளை பார்வையிட்டார். இந்த கண்காட்சியில் களிமண், காகிதக்கூழ், பளிங்குத்தூள், மரம், கருங்கல், ரேடியம், கொல்கத்தா களிமண் போன்ற பலவகை கைவினை பொருட்களினால் தயரிக்கப்பட்ட கொலு பொம்மைகள் சிறப்பான முறையில் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளன. மேலும், கொலுப்படி செட், கிரகப்பிரவேச செட், வேத மூர்த்திகள், அஷ்டதிக் பாலகர்கள், அஷ்ட பைரவர்கள், நவகிரகங்கள், தசாவதாரம் செட், அஷ்ட லெட்சுமி செட், விநாயகர் செட், குபேரன் செட், கிரிவலம் செட், திருமலை செட், கோபியர் செட், தர்பார் செட், மைசூர் தசரா செட், கிரிக்கெட் விளையாட்டு செட், சங்கீத மும்மூர்த்திகள் செட், கருட சேவை செட், வைகுண்டம் செட், துர்கா பூஜை செட், அஷ்ட வராகி செட், நவதுர்க்கை செட், பூதகணங்கள், கிருஷ்ணர் விளையாட்டு செட் போன்ற சிறப்பான செட் பொம்மைகள் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் ராஜஸ்தான், கொல்கத்தா, புனே, புதுடெல்லி போன்ற பிற மாநிலங்களில் இருந்தும் கொண்டு வரப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த கண்காட்சியானது அடுத்த மாதம் (அக்டோபர்) 4-ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறுகிறது. இங்கு இடம் பெற்றுள்ள அனைத்து கொலு பொம்மைகளுக்கும் 10 சதவீத தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. அனைத்து கடன் அட்டைகளும் எவ்வித சேவை கட்டணமும் இன்றி ஏற்றுக்கொள்ளப்படும். இக்கண்காட்சி வாயிலாக ரூ.20 லட்சம் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து, பூம்புகார் விற்பனை நிலைய மேலாளர் சக்தி தேவி கூறுகையில், இந்த ஆண்டு கண்காட்சியில் புதிய வரவாக ரேணுகா தேவி சிலை, துளசி அம்மன் சிலை, சியாமளா தேவி சிலை, ராவணன் வதம் செட்டு, அரசர் தர்பார் செட்டு, மல்யுத்த வீரர்கள் செட், சிவன்- பார்வதி சிலை, கார்த்திகை பெண்கள் செட், திருவாரூர் தியாகராஜர்- கமலாம்பாள் செட், அயோத்தி ராமர் சிலை, அப்துல் கலாம் சிலை, விவேகானந்தர் சிலை உள்ளிட்டவைகள் இடம்பெற்றுள்ளன. ரூ.75 முதல் ரூ. 40 ஆயிரம் வரை சிலைகள் விற்பனைக்கு உள்ளது" என்றார்.
Next Story

