திருச்சிற்றம்பலம் புராதனவனேஸ்வரர் கோவிலில் திருப்பணி வேலைகள் தொடங்குவது தொடர்பான ஆலோசனை கூட்டம் கிராம மக்கள் பங்கேற்பு

திருச்சிற்றம்பலம் புராதனவனேஸ்வரர் கோவிலில் திருப்பணி வேலைகள் தொடங்குவது தொடர்பான ஆலோசனை கூட்டம் கிராம மக்கள் பங்கேற்பு
X
ஆலோசனைக் கூட்டம்
தஞ்சாவூர் மாவட்டம், திருச்சிற்றம்பலத்தில் அமைந்துள்ள புராதன வனேஸ்வரர் கோவிலில் திருப்பணி வேலைகள் தொடங்குவது தொடர்பான ஆலோசனை கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. தஞ்சை மாவட்டம், திருச்சிற்றம்பலத்தில் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட புராதனவனேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. காலத்தால் பழமை வாய்ந்த இக்கோவிலின் குடமுழுக்கு விழா, கடந்த 2001 ஆம் ஆண்டு நடைபெற்றது.  அதன் பிறகு குடமுழுக்கு விழா இன்னும் நடைபெறவில்லை.  திருப்பணி வேலைகள் செய்து குடமுழுக்கு விழாவை நடத்துவதற்கு வசதியாக கடந்த சில ஆண்டுகளாக வைகாசி விசாக திருவிழா உள்ளிட்ட முக்கிய திருவிழாக்கள் நடைபெறவில்லை.  கோவிலில் வழக்கமான நான்கு கால பூஜைகள் மட்டுமே தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கோவிலின் திருப்பணி வேலைகள் தொடங்குவதற்கு முன்பாக பல லட்சம் ரூபாய் செலவில் புதிய தேர் வடிவமைக்கப்பட்டு, கடந்த 2023 ஆம் ஆண்டு வெள்ளோட்டம் விடப்பட்டது. தற்போது தேர் அதன் நிலையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், புராதனவனேஸ்வரர் கோவிலில் தமிழக அரசு வழங்கிய நிதி உதவியுடன் பக்தர்களின் உதவியும் சேர்த்து திருப்பணி வேலைகள் செய்து குடமுழுக்கு விழாவை நடத்துவதற்கு கிராம மக்கள் முடிவு செய்தனர்.  அதனைத் தொடர்ந்து புராதனவனேஸ்வரர் கோவில் பெரியநாயகி அம்பாள் சன்னதி முன்பாக அமைந்துள்ள மண்டபத்தில் புதன்கிழமை காலை திருப்பணி வேலைகள் தொடங்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.  கூட்டத்தில், கோவிலில் செய்யப்பட உள்ள வேலைகள் மற்றும் பணிகள் குறித்து விரிவாக கலந்தாலோசனை செய்யப்பட்டது.  அதனைத் தொடர்ந்து அனைத்து கிராம மக்களின் ஆதரவுடன் வரும்   11 ஆம் தேதி வியாழக்கிழமை (ஆவணி 26) அன்று காலை காலை மணி10.45.க்கு மேல் 11:45 மணிக்குள் பாலாலயம் செய்து திருப்பணி வேலைகள் தொடங்குவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.  மேலும் பாலாலயம் தொடங்குவதற்கு வசதியாக தனது சொந்த செலவில் நிதி உதவி வழங்கிய பேராவூரணி எம்எல்ஏ நா.அசோக்குமாருக்கு கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது. இதில் முக்கிய பிரமுகர்கள், கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர். கோவிலின் தலைமை அர்ச்சகர் சாமிநாதன் நன்றி கூறினார்.
Next Story