நூறு நாள் வேலை கேட்டு, விவசாயத் தொழிலாளர்கள் மனு கொடுக்கும் போராட்டம் 

நூறு நாள் வேலை கேட்டு, விவசாயத் தொழிலாளர்கள் மனு கொடுக்கும் போராட்டம் 
X
மனு கொடுக்கும் போராட்டம் 
ஊரக வேலை உறுதித்திட்ட சட்ட விதிகளின்படி, வேலை அட்டை பெற்றுள்ள அனைவருக்கும் தொடர்ச்சியாக வேலை வழங்க வேண்டும். அனைத்து ஊராட்சிகளிலும் உடனடியாக வேலையை தொடங்க வேண்டும். வேலை வழங்காத நாட்களுக்கு, வேலை இல்லாத கால படியை வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும்.  தாமதமாக வழங்கப்படும் ஊதியத்துக்கு, உச்சநீதிமன்றம் உத்தரவுப்படி வட்டியை சேர்த்து வழங்க வேண்டும். நூறு நாள் வேலைத் திட்டத்திற்கு, ஒன்றிய அரசு ரூ.2.5 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.  தினக்கூலியை ரூ.600 ஆகவும், வேலை நாட்களை 200 நாட்களாகவும் அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில், மனுக்கொடுக்கும் ஆர்ப்பாட்டம், தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் புதன்கிழமை காலை நடைபெற்றது. அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் ஒன்றியத் தலைவர் வி.தமிழ்செல்வன் ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் கே.பெஞ்சமின் முன்னிலை வகித்தார். சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர்.வாசு, சிபிஎம் பட்டுக்கோட்டை ஒன்றியச் செயலாளர் எஸ்.கந்தசாமி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.  சிவகாமசுந்தரி, மூக்கையன், செல்வராஜ், லெனின் உள்ளிட்ட வி.தொ.ச ஒன்றியக்குழு உறுப்பினர்கள், விவசாயத் தொழிலாளர்கள் 55க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story