மழை காலத்திற்குள் அனைத்து பணிகளையும் விரைவாக முடிக்க வேண்டும்: மேயர் உத்தரவு

X
தூத்துக்குடி மாநகராட்சியில் மழை காலத்திற்குள் அனைத்து பணிகளையும் விரைவாக முடிக்க வேண்டும் என்று ஒப்பந்ததாரர்களுக்கு மேயர் ஜெகன் பெரியசாமி உத்தரவிட்டார். தூத்துக்குடி மாநகராட்சியில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் ஆணையர் ப்ரியங்கா முன்னிலையில் அதிகாரிகள், ஒப்பந்ததாரர்களுடன் மாநகராட்சி அரங்கத்தில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மேயர் பேசுகையில் : செப்டம்பர் மாதம் இறுதியில் மழைக்காலம் தொடங்கி விடும். தசரா விடுமுறை பத்து நாட்கள் நடைபெறும். ஆகையால் மாநகராட்சியில் பணிகளை எடுத்த ஒப்பந்தக்காரர்கள் பணிகளை விரைவாக நல்லமுறையில் முடிக்க வேண்டும். மக்கள் எந்த வகையிலும் பாதிக்காத வகையில் இருக்க வேண்டும். அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. அதன்படி மாநகராட்சியில் பணிகளை எடுத்த ஒப்பந்தக்காரர்கள் உடனடியாக பணிகளை நல்லமுறையில் முடிக்க வேண்டும். அதற்கான காலக்கெடுகளை ஒவ்வொரு ஒப்பந்தக்காரர்களும் பின்பற்ற வேண்டும் என்று மேயர் பேசினார். ஆய்வுக் கூட்டத்தில் மாநகராட்சி பொறியாளர் தமிழ்ச்செல்வன் துணைப் பொறியாளர் சரவணன், நகரமைப்பு திட்ட உதவி செயற்பொறியாளர் முனீர் அகமது, உதவி ஆணையர் கல்யாண சுந்தரம், இளநிலை பொறியாளர்கள் செல்வம், பாண்டி, லெனின், அமல்ராஜ் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story

