ஓய்வுபெற்ற வருவாய் கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தல்
தமிழ்நாடு வருவாய்த்துறை ஓய்வுபெற்ற கிராம உதவியாளர் நலச்சங்கம் சார்பில் மாநில கோரிக்கை மாநாடு, தஞ்சாவூர் ஆபிரகாம் பண்டிதர் சாலையில் உள்ள லாலி ஹாலில் புதன்கிழமை நடைபெற்றது. மாநாட்டிற்கு மாநில தலைவர் பெ.ராஜூ தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் சி.பிச்சமுத்து வரவேற்றார். அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாநில பொதுச்செயலாளர் பி.கிருஷ்ணமூர்த்தி மாநாட்டை துவக்கி வைத்துப் பேசினார். மாநாட்டில், கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சின்னை. பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இந்த மாநாட்டில், வருவாய் துறையில் கிராம உதவியாளராக பணிபு ரிந்து ஓய்வூதியம் பெறும் ஓய்வுபெற்ற கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் ரூ.7,850ஐ வழங்க வேண்டும். ஓய்வூதியம் பெறும் கிராம உதவியாளருக்கும், குடும்ப ஓய்வூதியர்களுக்கும் குடும்ப பாதுகாப்பு நலநிதி வழங்க வேண்டும். அரசு ஓய்வூதியர்கள் பெற்று வரும் அனைத்து சலுகைகளும் ஓய்வூதியம் பெறும் ஓய்வு பெற்ற கிராம உதவியாளர்களுக்கும் பொருந்தும் என அரசாணை வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட 3 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மாநாட்டில், அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் கலியமூர்த்தி, மாநில செயற்குழு உறுப்பினர் ஆர்.ராஜகோபாலன், வருவாய்த்துறை அலுவலர் சங்கம் மாநிலப் பொருளாளர் வே.சோமசுந்தரம், அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாநில பொருளாளர் ந. ஜெயச்சந்திரன், அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாநில செயலாளர் குரு. சந்திரசேகரன், வருவாய்த்துறை ஓய்வு பெற்ற கிராம உதவியாளர் நலச்சங்கம் மாநிலச் செயலாளர் பி.தனராஜ், அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் வட்டச் செயலாளர் சிவ.ரவிச்சந்திரன் மற்றும் வருவாய்துறை ஓய்வு பெற்ற கிராம உதவியாளர் நலச்சங்க நிர்வாகிகள், மாநில, மாவட்ட, வட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிறைவாக, அரசு ஊழியர் சங்க மாநில துணை பொதுச் செயலாளர் ஏ.ரங்கசாமி நன்றி கூறினார்.
Next Story



