கல்லூரி வாழ்க்கை தான் எதிர்காலத்தை தீர்மானிக்கும் : ஆட்சியர் அறிவுரை!

கல்லூரி வாழ்க்கை தான் எதிர்காலத்தை தீர்மானிக்கும் : ஆட்சியர் அறிவுரை!
X
கல்லூரி வாழ்க்கை தான் மாணவ மாணவிகளின் உண்மையான எதிர்காலத்தை தீர்மானிக்கும் இடம் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் கூறினார்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் பள்ளிகல்வித்துறை இணைந்து நடத்தும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 12ஆம் வகுப்பு வரை தமிழ்வழியில் ஆர்வமுடன் பயின்று 2024-25ஆம் கல்வியாண்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்களுடன் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், கலந்துரையாடி, தொழிற்கல்விப் படிப்புகள், கல்லூரிகளை தேர்வு செய்தல், கலை மற்றும் அறிவியல் சார்ந்த படிப்புகள், தொழில்நுட்பக் கல்வி, தொழிற்பயிற்சி கல்வி படிப்புகள், கல்லூரிகள் தேர்வு, வேலைவாய்ப்புகள் உள்ளிட்டவை குறித்த உரிய வழிகாட்டுதல்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தெரிவித்ததாவது: மாணவ, மாணவியர்களிடையே உயர்கல்வியை ஊக்குவிக்கும் வகையில் நான் முதல்வன் திட்டத்தின்கீழ் மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்து உரிய வழிகாட்டுதல்களை வழங்க வேண்டுமென்ற நோக்கில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, மாணவர்களுக்கு உயர்கல்வியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அனைத்து மாணவர்களும் மதிப்பெண்களுக்கு ஏற்றவாரு உயர்கல்வியில் சரியான பாடப்பிரிவில் சேர்வதை உறுதிசெய்வது, அந்த மாணவர்கள் அனைவருக்கும் என்னென்ன விதமான படிப்புகள் உள்ளது, எவ்வளவு மதிப்பெண் பெற்றிருந்தால் எந்தெந்த மாதிரியான படிப்புகளில் சேரமுடியும். அதற்கு எந்தெந்த வழிகளிலெல்லாம் விண்ணப்பிக்கலாம், எந்தெந்த பாடப்பிரிவுகளுக்கு சமுதாயத்தில் வரவேற்பு கிடைக்கக்கூடியது, அரசு மற்றும் தனியார் துறை வேலைவாய்ப்புகள் போன்ற விவரங்களையெல்லாம் பள்ளி தலைமையாசிரியர்கள், உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்கள் ஆகியோர்களுக்கு தெரிவித்து அந்த தகவல்களையெல்லாம் மாணவர்களுக்கு தெரியப்படுத்தி உயர்கல்வி வழிகாட்டுதல்களை வழங்கி வருகிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான தமிழ்நாடு அரசு மாணவர்களின் நலன்காக்கும் வகையில் பல்வேறு முன்மாதிரியான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில், மாணவ, மாணவியர்களிடையே உயர்கல்வியை ஊக்குவிக்கும் வகையில் நான் முதல்வன் திட்டத்தின்கீழ் கல்லூரிக் கனவு, உயர்வுக்குப்படி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் மூலமாக மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்து உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு வருகிறது. மாணவர்களாகிய நீங்கள் உங்களுடைய குடும்பத்தின் பொருளாதார சூழ்நிலைகளையெல்லாம் நன்கு அறிந்து கல்வி கற்க வேண்டும். தமிழ்வழியில் படிப்பதற்கு நீங்கள் பெருமைகொள்ள வேண்டும்.
Next Story