கோவை அருகே பரிதாபம்: காதலி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சோகத்தில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை!

கோவை அருகே பரிதாபம்: காதலி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சோகத்தில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை!
X
காதலி உயிரிழந்த சோகத்தை தாங்க முடியாமல் வாலிபர் விஷம் குடித்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே காதலி உயிரிழந்த சோகத்தை தாங்க முடியாமல் வாலிபர் விஷம் குடித்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கழிங்கநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த கருப்புசாமியின் மகன் தனுஷ் (வயது 22) கறிக்கோழி கடையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கும் அருகிலுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பிளஸ் டூ மாணவிக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி செல்போனில் தொடர்பில் இருந்து வந்தனர். சமீபத்தில் அந்த மாணவி ஓணம் பண்டிகையை முன்னிட்டு தனது சொந்த ஊரான கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டம் மஞ்சேரி சென்றார். அங்கு ஆற்றில் குளிக்கச் சென்ற அவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். இவர் அனுப்பிய குறுஞ்செய்திகளுக்கு இரண்டு நாட்களாக பதில் வராததால் தனுஷ் அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது தான், காதலி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த செய்தி தெரியவந்தது. இதனால் மனம் தளர்ந்த தனுஷ், காதலி இல்லாமல் நான் எப்படிப் வாழ்வது? என்று நண்பர்களிடம் அழுது புலம்பியுள்ளார். இதையடுத்து மன விரக்தியடைந்த அவர் விஷம் குடித்து வீட்டிற்கு திரும்பியுள்ளார். திடீரென வாந்தி எடுத்த நிலையில் பெற்றோர் கேட்டபோது, விஷம் குடித்ததை கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த பெற்றோர் அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி தனுஷ் உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொண்டாமுத்தூர் காவல்துறை இந்த தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
Next Story