சேதுபாவாசத்திரம் அருகே ஜேஆர்சி சார்பில், ஜெனிவா ஒப்பந்த நாள் விழா

X
தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், புதுப்பட்டினம் அபு மெட்ரிக் பள்ளியில், தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை, இளையோர் செஞ்சிலுவை சங்கம் சார்பில், வியாழக்கிழமை ஜெனிவா ஒப்பந்த நாள் விழா நடைபெற்றது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இ.மாதவன் வழிகாட்டுதலின்படியும், பட்டுக்கோட்டை மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) வ.மதியழகன் அறிவுறுத்தலின் பேரிலும் நடைபெற்ற, நிகழ்ச்சியின் துவக்கமாக ஜே.ஆர்.சி. சேதுபாவாசத்திரம் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் கு.கமலராஜன் வரவேற்றார். அபு மெட்ரிக் பள்ளி தாளாளர் துல்கருனைன் கொடி ஏற்றி துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். சேதுபாவாசத்திரம் ஒன்றிய வட்டாரக்கல்வி அலுவலர் மா.க.இராமமூர்த்தி வாழ்த்திப் பேசினார். பள்ளியின் தாளாளர், ஜே.ஆர்.சி மாவட்ட அமைப்பாளர் ஏ.பிச்சைமணி ஆகியோர் ஹென்றி டுனான்ட் படத்தை திறந்து வைத்தனர். திருச்சி மண்டல ஜே.ஆர்.சி. ஒருங்கிணைப்பாளரும், தஞ்சாவூர் மாவட்ட அமைப்பாளருமான ஏ. பிச்சைமணி ஜெனிவா ஒப்பந்த நாள் விளக்க உரையாற்றினார். தொடர்ந்து, முக்கிய வீதிகள் வழியாக போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில், பங்கேற்ற மாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி, முழக்கங்களை எழுப்பியவாறு சென்றனர். நிகழ்ச்சிகளை, ஒன்றிய ஜேஆர்சி ஆசிரியர் செல்வராஜ் தொகுத்து வழங்கினார். வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் கு.கமலராஜன், பாரதிராஜாஆகியோர் போட்டிகளை ஒருங்கிணைத்தனர். விழாவில் 450க்கும் மேற்பட்ட ஜே.ஆர்.சி. மாணவர்கள் பங்கு பெற்றனர். மாணவர்களுக்கு 8 வகையான தனித்திறன் போட்டிகள் நடத்தப்பட்டு சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கப்பட்டன. நிறைவாக ஜே.ஆர்.சி. ஒருங்கிணைப்பாளர் பாரதிராஜா நன்றி கூறினார்.
Next Story

