பூதலூரில் ரத்தநிலா என்னும் முழு சந்திர கிரகணம் காணும் நிகழ்வு! குழந்தைகளை ஏமாற்றிய மேகம் மற்றும் மழை.... 

அறிவியல் நிகழ்வு
தஞ்சாவூர் மாவட்டம், பூதலூரில் செப். 7 இரவு கிரகங்களின் நிழல் விளையாட்டு நிகழ்வான சந்திர கிரகணத்தை காண வித்யா மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி வளாகத்தில் தொலை நோக்கிகளுடன் விரிவான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் பெரியார் புரா திட்டம், தமிழ்நாடு ஆஸ்ட்ரானமி அண்ட் சயின்ஸ் சொசைட்டி, வித்யா மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி,  தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் தஞ்சாவூர் ஆஸ்ட்ரொ கிளப் இணைந்து அரிய நிலவு மறைப்பு நிகழ்வான சந்திர கிரகண காணல் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர், ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணியிலிருந்து, பெற்றோரும், மாணவர்களும் பள்ளி வளாகத்தில் குவிந்தனர். இரவு 8 மணிக்கு வீசிய பெரும் காற்றும், அடர் மேகமும், தொடர் மழையும் இந்த அரிய நிகழ்வை மாணவர்களும், பொதுமக்களும் நேரடியாக காண இயலாத நிலையை ஏற்படுத்தியது. உடனடியாக ஆர்வலர்களின் வேட்கையை நிவர்த்தி செய்ய  இணையவழியாக சந்திர கிரகண நிகழ்வு விளக்கிக் காட்டப்பட்டது.  மேலும், தொலை நோக்கியைக் கொண்டு தொலைவில் உள்ள ஒளிகளைக் காணச் செய்து, அதன் தொழில் நுட்பமும் விளக்கப்பட்டது. பள்ளி முதல்வர் ஏ.தேவஅன்பு தலைமையில் நடைபெற்ற நிகழ்வை, பள்ளியின் தாளாளர் ஏ.செல்வகுமாரி தொடங்கி வைத்தார்கள். பெரியார் புரா திட்டத்தின் நிர்வாகி பேராசிரியர் வெ.சுகுமாரன், பெரியார் மணியம்மை பல்கலைக் கழக பேராசிரியர்  க.கேசவன் ஆகியோர் விளக்க உரை நிகழ்த்தினர்.  தமிழ்நாடு ஆஸ்ட்ரானமி அண்ட் சயின்ஸ் சொசைட்டி நிர்வாகி பாலகுருநாதன், தஞ்சாவூர் ஆஸ்ட்ரோ கிளப் ஒருங்கிணைப்பாளர் புவனேஸ்வரி ஆகியோர் அறிவியல் தொழிநுட்ப விளக்கமளித்தனர். சமூக ஆர்வலர் பொ.கலியமூர்த்தி, கல்வியாளர் பாண்டியன் ஆகியோர் சிறப்பிக்கப்பட்டனர். இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வை பெரியார் மணியம்மை நிகர்நிலை பல்கலைக் கழக உயிரி தொழில் நுட்ப ஆய்வாளர் ர.வைஷ்ணவி ஒருங்கிணைத்தார். கிரகண காலங்களில் உண்ணவோ, வெளியில் வரவோ கூடாது என்றிருந்த பழமைவாத சிந்தனையைத் தகர்த்திடும் வகையில் அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டது. நள்ளிரவுக்கு மேல் கிரகண விடுவிப்பு நிகழ்வை அனைவரும் கண்டு ரசித்தனர்.
Next Story