பேராவூரணி அருகே, பள்ளிக்கு நன்கொடையாக வந்த வாகனத்தை இயக்கி வைத்த மாவட்ட ஆட்சியர்

X
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள நடுவிக்குறிச்சி அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில், மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் பள்ளி வாகன துவக்க விழா நடைபெற்றது. இதில், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம், பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மாவட்ட அலுவலர் ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு கொடியசைத்து பள்ளி வாகனத்தை துவக்கி வைத்தனர். இப்பள்ளியில், சுற்றுவட்டார குக்கிராமங்களைச் சேர்ந்த 80 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். போதிய போக்குவரத்து வசதி இல்லாமல் மாணவ, மாணவிகள் சிரமப்பட்டு வந்த நிலையில், ஒட்டங்காடு டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் கிராம வளர்ச்சிக்குழு அறக்கட்டளை சார்பில், ரூ.22 லட்சம் மதிப்பில் மாணவர்கள் பயணிக்கும் வகையில் வேன் வழங்கப்பட்டுள்ளது. ஓட்டுநருக்கான சம்பளத்தை பள்ளி ஆசிரியர்களும், வாகன எரிபொருள் செலவை டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் கிராம வளர்ச்சிக்குழுவும் ஏற்றுக் கொண்டுள்ளனர். காலையில் இரு நடையும், மாலையில் இரு நடையும் வாகனம் இயக்கப்படுகிறது. முன்னதாக, பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற, திறனறித் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் சால்வை அணிவித்து பாராட்டினார். நிகழ்ச்சியில், பட்டுக்கோட்டை வட்டாட்சியர் தர்மேந்திரா, டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் கிராம வளர்ச்சிக்குழு தலைவர் கே.ஜே. ஆசீர்வாதம், பொருளாளர் நேரு, பள்ளி தலைமையாசிரியர் சற்குணம், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக, பள்ளி மேலாண்மைக் குழு நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story

