புகாரை வாபஸ் பெற சொல்லி மர்ம நபர் கொலை மிரட்டல் – சினிமா தயாரிப்பாளர் போலீசில் புகார்!

X
கோவையைச் சேர்ந்த சினிமா தயாரிப்பாளர் சஞ்சய் குமார் ரெட்டி (46) மீது மர்ம நபர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சஞ்சய் குமார் ரெட்டி, பெருமாள்சாமியின் மகன் ஆவார். இவர் கடந்த ஆண்டு “பேசஸ்” என்ற மலையாள திரைப்படத்தை தயாரித்தார். அந்த படத்தின் பிந்தைய பணிகளை கேரள மாநிலம் கொச்சியில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு ஒப்படைத்திருந்தார். கடந்த ஜனவரி மாதம் இவர் மனைவி லாவண்யாவுடன் லண்டன் சென்றிருந்தார். இந்நிலையில், சஞ்சய் குமார் ரெட்டி இறந்துவிட்டதாக போலியான இறப்புச் சான்றிதழ் தயாரித்து, “பேசஸ்” திரைப்படத்தை 6 கோடி ரூபாய்க்கு விற்று, 20 லட்ச ரூபாய் முன்பணம் பெற்ற மோசடி கும்பல் ஒன்று வெளிச்சம் பார்த்தது. இதுகுறித்து அவர் கேரள போலீஸ் டிஜிபிக்கு புகார் அளித்தார். பாலரிவட்டம் போலீசார் விசாரணை நடத்தி, திரைப்பட இயக்குநர் நீலேஷ், சாலச்சித்திரம் பிலிம்ஸ் உரிமையாளர் ராஜேஷ், கோவை புதூரைச் சேர்ந்த முருகேசன், திருச்சி பொன்மலையைச் சேர்ந்த ஆரோக்கியராஜ் ஆகிய 4 பேருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர். இவர்களின் முன் ஜாமின் மனுவை கேரள நீதி மன்றம் தள்ளுபடி செய்தது. இதனால், கேரள தனிப்படை போலீசார் கோவை, திருச்சி, சென்னை பகுதிகளில் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில், லண்டனில் இருந்த சஞ்சய் குமார் ரெட்டிக்கு மர்ம நபர் ஒருவரிடமிருந்து வாட்ஸ்அப் கால் வந்தது. அவர், தன்னை குனியமுத்தூர் போலீஸ் எனக் கூறி, கேரளாவில் உள்ள வழக்கை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தினார். பின்னர், வழக்கை வாபஸ் பெறாவிட்டால் அவரது மகளை கடத்தி கொலை செய்வதாக மிரட்டினார். இதுகுறித்து சஞ்சய் குமார் ரெட்டி, தமிழக டிஜிபி, கோவை மாவட்ட கலெக்டர், கேரள டிஜிபி மற்றும் பாலரிவட்டம் போலீசுக்கு மின்னஞ்சல் மூலம் புகார் அளித்துள்ளார். மேலும், தயாரிப்பாளரை மிரட்டிய மர்ம நபரின் ஆடியோ பதிவு சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story

