பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்டம் ஆட்சியர்.
NAMAKKAL KING 24X7 B |9 Sept 2025 7:02 PM ISTநாமக்கல் மாவட்ட ஆட்சியர் தலைமையில், திருச்செங்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சர் பெண் குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்கள். மேலும் குழந்தைகளின் கல்வியை ஊக்குவிக்கும் விதமாக இல்லம் தேடி கல்வி திட்டம், நான் முதல்வன், புதுமைப் பெண் திட்டம், பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான காலை உணவுத்திட்டம் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்கள். மேலும், பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக ”பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்" திட்டத்தை தனி கவனம் செலுத்தி சிறப்பாக செயல்படுத்தி வருகின்றார்கள். பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்" என்ற திட்டத்தின் முக்கிய நோக்கமானது, பெண் குழந்தைகளின் பிறப்பினை உறுதி செய்து, அவர்களின் கல்வி, திறன் மற்றும் பங்கேற்பினை மேம்படுத்துதல் ஆகும்.” இத்திட்டமானது ஆண், பெண் குழந்தை விகிதத்தை சமன்படுத்துவதற்காகவும், குறைந்து வரும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், பெண் குழந்தைகளின் பாலின சமநிலையை மேம்படுத்திடவும், பெண் குழந்தைகள் கல்வி கற்பதை உறுதி செய்திடவும். பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிபடுத்தவும், பாலின பாகுபாட்டை நீக்கவும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பெண் குழந்தைகளின் கல்வி, பெண்கள் சமூகத்தில் பன்மடங்கு வளர்ச்சி அடைவதற்கும், சமூகத்தின் ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்கும் வழிவகுக்கும். பெண் குழந்தை பாதுகாப்பை உறுதி செய்யவும், பெண் குழந்தைகளின் கல்வி முன்னேற்றத்திற்காகவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய தினம் திருச்செங்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.மாணவ, மாணவியர்களுக்கு கல்வி ஒன்றே குறிக்கோளாக இருக்க வேண்டும். யோகா, விளையாட்டு போட்டிகள் போன்றவற்றில் தங்களை ஈடுபடுத்தி ஆரோக்கியமாக இருக்க வேண்டும். படித்து முடிப்பது மட்டுமல்லாமல், தங்களது திறன்களை வளர்த்து நல்ல வேலைகளில் பணியாற்ற வேண்டும். கல்வியை முழுமையாக கற்கும் பொழுது, நன்மை, தீமை குறித்து புரிதல்கள் ஏற்படும். மேலும், முழு ஈடுபாட்டுடன் படிக்க வேண்டும். எந்த செயலை செய்தாலும் அதில் முழு முயற்சியுடன் ஈடுபட வேண்டும். அப்பொழுது தான் நமது இலட்சியங்களை அடைய முடியும். மாணவர்கள் ஆரோக்கியமான உணவை உண்ண வேண்டும். வாசிப்பு திறனை வளர்த்து கொள்ள வேண்டும். மற்ற மாணவர்களுடன் இணைந்து நல்ல கருத்துக்களை விவாதிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். முன்னதாக, திருச்செங்கோடு நகராட்சி ராமசாமி முதலியார் திருமண மண்டபம் மற்றும் பள்ளிபாளையம் நகராட்சி பல்லக்காபாளையம் கிராம சேவை மையத்தில் நடைபெற்ற "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமில் ஆய்வு மேற்கொண்டு, உடனடி தீர்வாக பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி தி.காயத்திரி உட்பட துறைச் சார்ந்த அலுவலர்கள், மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
Next Story


