நாமக்கல் அருகே தென்னந்தோப்பில் கள் இறக்கி சந்தைப்படுத்தும் நிகழ்ச்சி!

X
Namakkal King 24x7 |9 Sept 2025 7:37 PM ISTதென்னை மரத்தை தாக்கும் காண்டாமிருக வண்டு, வெள்ளை ஈக்கள் ஆகியவற்றை கட்டுப்படுத்தவும் இயற்கையான மகரந்த சேர்க்கை நடைபெற்று அதிக மகசூல் பெறவும் கள் இறக்க வேண்டும் என்பது விவசாய நடைமுறையாகும்.
நாமக்கல்- பரமத்தி சாலை டோல்கேட் அடுத்துள்ள கோனூர் பகுதியில், உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் தென்னந் தோப்பில் கள்ளு இறக்கி சந்தைப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் இரா.வேலுசாமி தலைமை வகித்தார். இதில் தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டு, தென்னை மரத்திலிருந்து கள் இறக்கி, அதனை பருகி, கள் ஒரு இயற்கையான உணவு பொருள் என்றும், கள் கலப்படத்திற்கு மட்டும்தான் மாநில அரசின் தடை உள்ளது. கலப்படமற்ற சுத்தமான கள் இறக்கி விற்பனை செய்ய தடை கிடையாது. மத்திய அரசின் உணவு பட்டியலில், கள் ஒரு இயற்கையான உணவு என்று வரையறுக்கப்பட்டுள்ளது. எனவே, தமிழ்நாடு அரசு மற்றும் காவல்துறை இதற்கு தடை விதிக்க கூடாது என்றும் கோரிக்கையை வலியுறுத்தினர்.முன்னதாக திங்கட்கிழமை (08.09.2025) இரவு, நாமக்கல் வட்டம், கோனூர் பகுதியில் விவசாயி வேலுசாமியின் தோட்டத்தில் வளர்க்கப்பட்டு வரும் தென்னை மரங்களில் கள் இறக்குவதற்கு அனுமதி மறுத்து, திருச்செங்கோடு மதுவிலக்கு காவல் துறையினர் இரவோடு இரவாக மரங்களில் கட்டி வைக்கப்பட்டிருந்த மண் கலயங்களை உடைத்து, அராஜகப் போக்கில் ஈடுபட்டதாக கூறி, தமிழ்நாடு உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு சங்க விவசாயிகள் உள்ளிட்ட விவசாய சங்கத்தினர் கண்டனம் தெரிவித்தனர்.அப்போது செய்தியாளர்களிடம் பேசிய உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாய சங்கத் தலைவர் இரா.வேலுசாமி,தமிழ்நாடு அரசு கள்லுக்கு தடை நீக்க வேண்டுமென நாங்கள் பலமுறை கோரிக்கை மற்றும் போராட்டங்கள் நடத்திய போதிலும் நிறைவேற்றப்படவில்லை. எனவே தென்னந்தோப்பில் கள்ளு கட்டு இறக்கி கள் இறக்கம் போராட்டம் என்று நடைபெறும் என அறிவித்தோம். 50 தென்னை மரத்தில் கலயம் கட்டி கள் இறக்க முயற்சி செய்தோம். ஆனால் இதனை முறியடிக்க வேண்டும் என்பதற்காக, திருச்செங்கோடு மதுவிலக்கு பிரிவு காவல்துறையினர் திங்கட்கிழமை இரவு தென்னை மரங்களின் கலயங்களை சேதப்படுத்தி சென்று விட்டார்கள். அதற்கு வழக்கை நாங்கள் சந்தித்துக் கொள்கிறோம் கலயங்களை சேதப்படுத்தக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்த போதிலும் விவசாய நிலத்தில் காவல் துறையினர் அத்துமீறி நுழைந்து, தென்னை மரத்தில் கட்டப்பட்டுள்ள கலயங்களை சேதப்படுத்தி மீதி கலயங்களை கொண்டு சென்று விட்டனர். இதற்கு காவல்துறையை ஏவல் துறையாக நடத்தும் தமிழக அரசை கண்டிக்கின்றோம்.விவசாயிகள் கலயம் கட்டி, அதனை இறக்கி சந்தைப்படுத்தி விட்டால், டாஸ்மாக் கடையில் மதுபான விற்பனை குறைந்து விடும் என்ற காரணத்தினால், கள் இறக்குவதற்கு தடை போடுகின்றனர். மாநில அரசே உடலுக்கு உயிருக்கு கேடு ஏற்படுத்தும் மதுபானங்களை டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்துவிட்டு, இயற்கையான உணவு பண்டமான தென்னங்களை இறக்கவும், விற்பனை செய்யக்கூடாது எனவும் தடை விதிப்பது அவர்கள் செய்யும் ஊழலை மறைப்பதற்காக தான். பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான தமிழ்நாடு அரசு இப்போது கள் இறக்குமதி செய்து விவசாயிகள் சந்தைப்படுத்தி வியாபாரிகள் ஆவதற்கு தடை போடுகிறது. பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ள தமிழ்நாடு அரசை மத்திய அரசு 356 சட்டப்பிரிவை பயன்படுத்தி கலைத்துவிட்டு, குடியரசு தலைவர் ஆட்சியை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.மேலும் தென்னை மரத்தை தாக்கும் காண்டாமிருக வண்டு, வெள்ளை ஈக்கள் ஆகியவற்றை கட்டுப்படுத்தவும் இயற்கையான மகரந்த சேர்க்கை நடைபெற்று அதிக மகசூல் பெறவும் கள் இறக்க வேண்டும் என்பது விவசாய நடைமுறையாகும். மேலும், கள்ளுக்கு தடையை நீக்குவோம் என வாக்குறுதி அளிக்கும் அரசியல் கட்சிக்கு மட்டுமே வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் விவசாயிகள் ஆதரவு அளிப்பார்கள் என்றும் கூறினார். இந்த நிகழ்ச்சியில், உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள், இளம் விவசாயிகள் சங்கத்தின் தலைவர் சௌந்தர் உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான விவசாய சங்கத்தினர் விவசாயிகள் கலந்துகொண்டனர்.
Next Story
