கோவை குனியமுத்தூரில் எடப்பாடி பழனிசாமி உரை !
மக்களை காப்போம் – தமிழகத்தை மீட்போம் எழுச்சி பயணத்தின் ஒரு பகுதியாக நேற்று குனியமுத்தூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறும்போது, குனியமுத்தூரில் மக்கள் வெள்ளம் காட்சியளிப்பதால், அடுத்த தேர்தலில் தொண்டாமுத்தூர் தொகுதி அதிமுகவுக்கு வெற்றி உறுதி எனத் தெரிவித்தார். எஸ்.பி. வேலுமணி மக்கள் பிரச்சனைகளில் அக்கறை கொண்டவர் எனவும், அதிமுக ஆட்சியே பொற்கால ஆட்சி எனவும் பாராட்டினார். திமுக ஆட்சியில் மின்சார கட்டணம், வீட்டு வரி, குடிநீர், குப்பை உள்ளிட்ட அனைத்திலும் அதிகரிப்பு செய்யப்பட்டு, மக்களின் தலையில் சுமை சுமத்தப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். அதிமுக ஆட்சியில் கொரோனா காலத்திலும் இலவச அரிசி, 2,500 ரூபாய் நிதி உதவி போன்றவை வழங்கப்பட்டதாகவும் நினைவூட்டினார். தற்போதைய திமுக ஆட்சியில் விலைவாசி மற்றும் கட்டுமானப் பொருட்களின் விலை விண்ணை முட்டுவதாகவும், மக்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படவில்லை என்றும் தெரிவித்தார். மாநகராட்சிகளில் ஊழல் அதிகரித்திருப்பதாகவும், மேயர்களைச் சுற்றி கமிஷன் பிரச்சனைகள் நிலவுவதாகவும் குற்றம்சாட்டினார். மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் கோவை மெட்ரோ ரயில் திட்டம், அத்திக்கடவு – அவிநாசி திட்டம், சிறுபான்மை சமூக நலத் திட்டங்கள் உள்ளிட்ட பல வளர்ச்சி பணிகள் செயல்படுத்தப்படும் என்றும் உறுதியளித்தார். இறுதியில், ஏழை மக்களுக்கு வீடுகள், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மானியம், பெண்களுக்கு தீபாவளியில் புதிய சேலை போன்ற நலத்திட்டங்களை அறிவித்தார். 2026 தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
Next Story




