தொண்டாமுத்தூரில் எடப்பாடி பழனிசாமி உரை !
மக்களை காப்போம் – தமிழகத்தை மீட்போம் எழுச்சி பயணத்தின் போது நேற்று தொண்டாமுத்தூரில் உரையாற்றிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 2026-இல் அதிமுக–பாஜக கூட்டணி நிச்சயம் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என உறுதி தெரிவித்தார். திமுக ஆட்சி ஊழல் மற்றும் மக்கள் விரோத நடவடிக்கைகளில் முழுமையாக ஈடுபட்டு வருகிறது என்றும், விவசாயிகளை அவமதிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார். அத்திக்கடவு–அவிநாசி இரண்டாம் கட்டத் திட்டம், குடிமராமரத்து மற்றும் விவசாயிகளுக்கான பல்வேறு நலத்திட்டங்கள் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார். சுகாதாரத் துறையில் நடைபெற்ற முறைகேடுகள், குறிப்பாக கிட்னி மாற்று அறுவை சிகிச்சை விவகாரம் குறித்து பேசிச் சுகாதாரத் துறை அமைச்சரை விமர்சித்தார். திமுக ஆட்சியில் மதுக்கடைகள் மூலம் பெரும் அளவில் ஊழல் நடைபெறுவதாக குற்றம்சாட்டிய அவர், அதிமுக ஆட்சி அமைந்தவுடன் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி, அம்மா உணவகம், அம்மா மினி கிளினிக், தாய்மார்களுக்கு தீபாவளி சேலை, ஏழை மக்களுக்கு வீடுகள் போன்ற திட்டங்கள் மீண்டும் அமல்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார். தொண்டாமுத்தூருக்கு முன்னர் அதிமுக வழங்கிய சாலைகள், குடிநீர் திட்டம், கல்லூரி, பேரூர் வட்டம், தர்ப்பணம் மண்டபம் போன்ற வளர்ச்சி பணிகளை எடுத்துக்காட்டிய அவர், மெட்ரோ ரயில் மற்றும் சிப்காட் தொழிற்பேட்டை போன்ற கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார்.
Next Story






