மேலப்புலியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

தூய்மையான குடிநீரை மாணவர்களுக்கு வழங்க வேண்டும் எனவும், கழிவறைகள் மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் பள்ளி தலைமையாசிரியருக்கு அறிவுறுத்தினார்.
மேலப்புலியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி திடீர் ஆய்வு மேற்கொண்டார். பெரம்பலூர் மாவட்டம், மேலப்புலியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அடிப்படை வசதிகள் மற்றும் மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவின் தரம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் இன்று (10.09.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். நேற்று பெய்த மழையின் காரணமாக பள்ளியின் நுழைவுவாயில் மழைநீர் தேங்கியதால் சேரும் சகதியுமாக இருந்ததைப் பார்வையிட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், இப்படி இருந்தால் மாணவ மாணவிகள் பள்ளிக்குள் வர சிரமமாக இருக்காதா, ஏன் இதை உடனடியாக சரிசெய்ய முடியவில்லை என பள்ளி தலைமையாசிரியரிடம் கேட்ட அவர், தற்போதைக்கு மண்ணைக் கொட்டி உடனடியாக சரி செய்திட வேண்டும் என உத்தரவிட்டார். அதனடிப்படையில் உடனடியாக மண் கொட்டி நிரவப்பட்டது. ஒரு வார காலத்திற்குள் நுழைவாயில் முன்பு சிமெண்ட் தளம் போடப்பட வேண்டும் என வட்டார வளர்ச்சி அலுவலருக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவதற்காக தயார் செய்து வைக்கப்பட்டிருந்த உணவினை சாப்பிட்டு பார்த்து, சாப்பாடு சுவையாகவும், தரமாகவும் உள்ளதா என ஆய்வு செய்தார். பின்னர் சமையல் கூடத்திற்கு சென்று பார்வையிட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், சமைப்பதற்கு தேவையான பொருட்கள் போதுமான அளவில் இருப்பில் உள்ளதா எனவும், சமையல் பொருட்கள் தூய்மையாக பராமரிக்கப்படுகிறதா எனவும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மழைக்காலம் வர இருப்பதால் இனி வரும் காலங்களில் பள்ளி வளாகத்திற்குள்ளோ,வெளியிலோ மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், தூய்மையான குடிநீரை மாணவர்களுக்கு வழங்க வேண்டும் எனவும், கழிவறைகள் மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் பள்ளி தலைமையாசிரியருக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது பெரம்பலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.செல்வகுமார், பெரம்பலூர் வட்டாட்சியர் திரு.பாலசுப்ரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story