கோவை: தயாரிப்பாளர் சஞ்சய்க்கு எதிராக மோசடி புகார் !

X
திரைப்பட தயாரிப்பாளர் சஞ்சய்குமார் ரெட்டி மீது அவரது கூட்டாளர்கள் கடும் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர். சஞ்சயால் முன்பு குற்றம் சாட்டப்பட்ட ரமேஷ், முருகேசன், ஆரோக்கியராஜ் ஆகியோர், கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர். அவர்கள் புகாரில், சஞ்சய் தங்கள்மீது கூறிய அனைத்து குற்றச்சாட்டுகளும் பொய்யானவை என்றும், அவர் வெளியிட்ட மகளுக்கு மிரட்டல் ஆடியோ கூட அவரே ஏற்பாடு செய்த நாடகம் என்றும் தெரிவித்துள்ளனர். அவருக்கு மகளே கிடையாது, தன்னை மிரட்டியதாக காட்டி எங்களை குற்றவாளிகளாக சித்தரிக்க முயன்றுள்ளார் என குற்றம் சாட்டினர். மேலும், சஞ்சய் முதலில் அறிமுகமானபோது தனது படத்தில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்கும் என கூறி பணம் பெற்றதாகவும், ஆனால் படத்தின் ஒரு பகுதி வேலைகள் மட்டுமே முடிந்த நிலையில் அதை கைவிட்டுவிட்டதாகவும், பின்னர் அவர்கள் தங்களது சொந்த செலவில் படப்பணிகளை முடித்ததாகவும் கூறினர். ஆனால் படத்தின் மூலம் கிடைக்கும் வருவாயில் சஞ்சய் தங்களுக்கு உரிய தொகையை வழங்காமல் ஏமாற்றி வருவதாகவும் தெரிவித்தனர். மேலும் சஞ்சய் மற்றும் அவரது மனைவி லாவண்யா பல்வேறு பெயர்களில் மோசடி செய்து வருவதாகவும், ஏற்கனவே குனியமுத்தூர் காவல் நிலையத்தில் சஞ்சய்க்கு எதிராக பல மோசடி புகார்கள் இருப்பதாகவும் அவர்கள் தங்களது புகாரில் குறிப்பிட்டுள்ளனர்.
Next Story

