பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் மேம்பட்ட கணினி மையம் திறப்பு விழா
பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் மேம்பட்ட கணினி மையம் திறப்பு விழா பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில், மேம்பட்ட கணினி மைய ஆய்வுக் கூடம் செப்டம்பர் 11, 2025 அன்று திறக்கப்பட்டது. இந்த விழாவில் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் மாண்பமை வேந்தர் உயர்திரு சீனிவாசன் அவர்கள் தலைமை வகித்து, திறந்து வைத்து பேசுகையில் “செயற்கை நுண்ணறிவு மற்றும் இணைய பாதுகாப்பு ஆகிய துறைகளில் மாணவர்களுக்கு தொழில்நுட்ப அறிவை வழங்கும் நோக்குடன் இந்த ஆய்வுக் கூடம் உருவாக்கப்பட்டுள்ளது. இது நம் கல்வித் துறையின் ஒரு முக்கிய முன்னேற்றம் என நான் பெருமையுடன் கூற விரும்புகிறேன். நவீன உலகில் செயற்கை நுண்ணறிவு என்பது வாழ்வின் அனைத்து துறைகளிலும் புகுந்துவிட்டது. மருத்துவம், வங்கி, கைத்தொழில், விவசாயம், கல்வி, காவல்துறை என பல துறைகளில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. மனிதக் கைகளால் சாத்தியமில்லாத வேகத்தில் தரவுகளை பகுப்பாய்வு செய்து முடிவெடுக்க, AI முக்கிய சாதனமாக உள்ளது. இன்று நாம் பயன்படுத்தும் சிறந்த நுண்ணறிவு வழிமுறைகளான இயந்திர கற்றல், ஆழமான கற்றல், இயற்கை மொழி செயலாக்கம் போன்றவை அனைத்தும் இந்த AI துறையின் பகுதிகள். இது, மாணவர்களுக்கு வேலைவாய்ப்பில் மட்டும் இல்லாமல், ஆராய்ச்சி மற்றும் புதுமைகளில் முன்னேற்ற வாய்ப்புகளை வழங்குகிறது. அதே நேரத்தில், இந்த டிஜிட்டல் யுகத்தில், இணைய பாதுகாப்பு என்பது மிக அவசியமானது. உலகம் முழுவதும் தரவு மீறல்கள், ஹேக்கிங், ரான்சம்வேர் போன்ற மோசடிகள் அதிகரித்து வருகிறது. இதற்காகவே இன்று ஒவ்வொரு நிறுவனமும் தன்னிச்சையான இணைய பாதுகாப்பு நிபுணர்களை தேடுகிறது. நம் மாணவர்கள் இந்த ஆய்வுக் கூடத்தின் வாயிலாக நவீன பாதுகாப்பு கருவிகள், எத்திக்கல் ஹாக்கிங், நெட்வொர்க் பாதுகாப்பு போன்ற அம்சங்களை கற்றுக்கொண்டு, பாதுகாப்பான டிஜிட்டல் சூழலை உருவாக்க உதவக்கூடிய வல்லுநர்களாக மாற வேண்டும். நம் பல்கலைக்கழகத்தின் நோக்கம் எப்போதும் தொழில்நுட்பத் திறன்களுடன் மனிதநேயத்தையும் வளர்ப்பதே. இந்த ஆய்வுக் கூடம் அதற்கு சிறந்த ஒரு எடுத்துக்காட்டு. என்று பேசினார். இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக ஐசிடி அகாடமியின் துணை பொது மேலாளர் பூர்ணபிரகாஷ் கலந்து கொண்டார். மேலும், இவ்விழாவில் தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமங்களின் அறக்கட்டளை உறுப்பினர் ராஜபூபதி, தனலட்சுமி பல்கலைக்கழக கூடுதல் பதிவாளர் முனைவர் இளங்கோவன், தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமங்களின் திட்டமிடல் மற்றும் மேம்பாட்டு அதிகாரி நந்தகுமார், பொறியியல் கல்லூரி டீன் கார்த்திகேயன், இணை டீன் வேல்முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story



