சட்டமன்ற பேரவை உறுதிமொழிக் குழு ஆய்வுக்கூட்டம்!

சட்டமன்ற பேரவை உறுதிமொழிக் குழு ஆய்வுக்கூட்டம்!
X
தூத்துக்குடியில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழிக் குழு 2024-2026-ன் தலைவர் மற்றும் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் தி.வேல்முருகன் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழிக் குழு 2024-2026-ன் தலைவர் மற்றும் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் தி.வேல்முருகன் தலைமையில், குழு உறுப்பினர்கள்/சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்.அருள் (சேலம் மேற்கு), எஸ்.மாங்குடி (காரைக்குடி), எம்.கே.மோகன் (அண்ணா நகர்), ஆகியோர் முன்னிலையில் தூத்துக்குடி மாவட்டத்திற்கு தொடர்புடைய உறுதிமொழிகளை ஆய்வு செய்தார். இந்த ஆய்வுக்கூட்டத்திற்கு முன்னதாக உறுதிமொழிக் குழு தி.வேல்முருகன் தெரிவித்ததாவது:- தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழிக்குழு நேற்யைதினம் கன்னியாக்குமரி மாவட்டத்தில் ஆய்வு பயணத்தை முடித்து, தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளது. அதனடிப்படையில் இன்றையதினம் காலையில் பல்வேறு பகுதிகளில் இக்குழு ஆய்வு செய்தது. தூத்துக்குடி மாவட்டம் தொழில்துறை மாவட்டமாக வளர்ந்து வருகிறது. இம்மாவட்டத்தில் சுமார் 2.76 கோடி மதிப்பீட்டில் தீயணைப்பு அலுவலகம் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிலிருக்கிறதை இக்குழு ஆய்வு செய்தது. இதில் அங்கு போதுமான தீயணைப்பு வீரர்கள் இருக்கின்றார்களா? என்பதையும் ஆய்வு செய்தது. தூத்துக்குடி மாவட்டத்திற்கு போதுமான தீயணைப்பு வீரர்களை நியமிப்பது தொடர்பாகவும், கூடுதலாக ஒரு தீயணைப்பு வாகனம் ஏற்பாடு செய்யவும் இக்குழு பரிந்துரை செய்த அந்த உறுதிமொழி நிறைவேற்றப்பட்டதை இக்குழு ஆய்வு செய்தது. தகவல் தொழில்நுட்ப பூங்கா ரூ.32.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்ட மாணவர்களுக்கு, வேலை வாய்ப்புக்காக காத்திருக்கின்ற இளைய தலைமுறையைச் சார்ந்த 900க்கும் நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி தரக்கூடிய நோக்கத்தில் தொடங்கப்பட்ட பணி பயன்பாட்டிற்கு வரப்பட்டுள்ளதா என்பதையும் ஆய்வு செய்து, ஒவ்வொரு தளத்திலும் எந்தமாதிரியான பணிகளுக்கான வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது? எந்தெந்த நிறுவனங்கள் தற்போது பணிகளை தொடங்கியிருக்கிறது? உள்ளிட்ட விவரங்களை இக்குழுவிற்கு தெரிவித்தனர். மேலும், அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை இக்குழு ஆய்வு செய்து, அங்குள்ளவர்கள் தங்களுக்கு பேருந்து வசதி தேவைப்படுகிறது என்று மாவட்ட ஆட்சியர் மற்றும் இக்குழுவிடம் கோரிக்கையை வைத்தனர். மாவட்ட ஆட்சியர் இக்கோரிக்கை உடனடியாக சரிசெய்யப்படும் என்று தெரிவித்தார்கள். தூத்துக்குடி மாநகராட்சி பி&டி காலனி பகுதிகளில் பாதாளச் சாக்கடை திட்டப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ரூ.510 கோடி மதிப்பீட்டில் பல பணிகள் நடைபெற்று கொண்டிருப்பதில், குறிப்பாக அதில் ஒரு பகுதியாக ரூ.150 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்ற பணிகளில் 75 சதவீதம் முடிவடைந்துள்ளது. இப்பணிகள் நடைபெற்று வருவதை காட்சிப்படுத்தப்பட்டதை இக்குழு பார்வையிட்டு ஆய்வு செய்தது. சட்டப்பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர், தமிழ்நாடு துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர் பெருமக்கள் ஆகியோர் அறிவித்த உறுதிமொழிகளை கட்டாயம் நிறைவேற்ற வேண்டும். அந்த வகையில் இம்மாவட்டத்திற்கு அறிவிக்கப்பட்ட உறுதிமொழிகளை நிறைவேற்றுவதற்கு அனைவரும் உறுதுணையாக இருந்துள்ளீர்கள். மாவட்ட ஆட்சியர் தலைமையில் இன்றையதினம் ஆய்வு செய்யப்பட்டு, பின்னர் அடுத்தடுத்த உறுதிமொழிகளை நிறைவேற்றுவது குறித்தும், நிறைவேற்றப்படாத உறுதிமொழிகளை நிறைவேற்றுவதற்கான வழிமுறைகள் குறித்தும் கலந்தாலோசனை செய்யப்படும் என தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழிக் குழு 2024-2026-ன் தலைவர் மற்றும் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் தி.வேல்முருகன் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வில் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இரவிச்சந்திரன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) செல்வி இரா.ஐஸ்வர்யா, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் சி.ப்ரியங்கா, மாவட்ட வன அலுவலர் இளையராஜா, கோவில்பட்டி உதவி ஆட்சியர் ஹீமான்ஷீ மங்கள், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்குழு துணைச் செயலாளர் ஸ்ரீ.ரா.ரவி, சார்பு செயலாளர் த.பியூலஜா, உதவி ஆட்சியர் (பயிற்சி) தி.புவனேஷ் ராம், உள்ளிட்ட அரசு துறைச் சார்ந்த உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story