தஞ்சாவூரில் முதலமைச்சர் கோப்பை மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கல்

பரிசு வழங்கல்
தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகில், அறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில், முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு அரசு உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம், நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி, சட்மன்ற உறுப்பினர்கள் துரை.சந்திரசேகரன் (திருவையாறு),  டி.கே.ஜி.நீலமேகம் (தஞ்சாவூர்), கா.அண்ணாதுரை (பட்டுக்கோட்டை), என்.அசோக்குமார்  (பேராவூரணி), மாநகராட்சி மேயர் சண்.இராமநாதன், துணை மேயர் மரு அஞ்சுகம் பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  இந்நிகழ்ச்சியில், உயர்கல்வித் துறை அமைச்சர் தெரிவித்ததாவது,  தமிழ்நாடு முதலமைச்சர் தமிழகம் அனைத்து துறைகளிலும் முன்னணி மாநிலமாக சிறப்பிடம் பெற வேண்டும் என்ற அடிப்படையில் பல்வேறு துறையின் வாயிலாக திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அதன் அடிப்படையில் விளையாட்டு துறையிலும் தமிழகத்தை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் சிறந்த இடத்தை பெற வேண்டும் என்ற நோக்கில் விளையாட்டு வீரர்களுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்புகளை தமிழகத்தில் உருவாக்கி வருகிறார்கள். தமிழ்நாடு துணை முதலமைச்சர் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் இளைஞர்களுக்கு உடற்பயிற்சியுடன் கூடிய விளையாட்டு மைதானங்கள் ஏற்படுத்திட வேண்டும் என்ற அடிப்படையில் ரூபாய் 3 கோடி மதிப்பீட்டில் சிறு விளையாட்டு அரங்கங்கள் சட்டமன்ற தொகுதிகள் தோறும் அமைக்கப்பட்டு வருகின்றன.  மேலும், விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் வேலை வாய்ப்பு மற்றும் உயர் கல்விகளில் மூன்று சதவீத உள்ஒதுக்கீட்டீன் கீழ் விளையாட்டு வீரர்களுக்கு இடங்கள் வழங்கப்பட்டு வருகிறது. எனவே, அனைத்து இளைஞர்களும் படிப்பில் கவனம் செலுத்துவது போல் விளையாட்டுகளிலும் கவனம் செலுத்தி தங்களது உடல் நலத்திலும் ஆரோக்கியத்திலும் அக்கறை செலுத்த வேண்டும். 2025-2026 ஆம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் பள்ளி, கல்லூரி, பொதுப்பிரிவு, மாற்றுத்திறனாளி மற்றும் அரசு ஊழியர் என ஐந்து பிரிவுகளில் தஞ்சாவூர் மாவட்டத்தில் அன்னை சத்யா விளையாட்டரங்கம் மற்றும் இதர இடங்களில் 26.08.2025 முதல் 10.09.2025 வரை நடைப்பெற்றது. இப்போட்டியில், பள்ளிப் பிரிவில் 7,750 மாணவர்களும்,  3,342 மாணவியர்களும், கல்லூரிப் பிரிவில் 3,034 மாணவர்களும், 2,097 மாணவியர்களும், பொதுப்பிரிவில் 958 ஆண்களும், 568 பெண்களும், மாற்றுத்திறனாளிப் பிரிவில் 228 ஆண்களும், 169 பெண்களும்,  அரசு ஊழியர் பிரிவில் 546 ஆண்களும், 304 பெண்களும் என 18,996 நபர்கள் கலந்து கொண்டார்கள். தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் தடகளம், இறகுப் பந்து, கூடைப்பந்து, வாலிபால், சிலம்பம், செஸ், மேசைப்பந்து, டென்னிஸ், நீச்சல், கபடி, கால்பந்து, கிரிக்கெட், கோகோ, கைப்பந்து, பூப்பந்து மற்றும் ஹாக்கி விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. மேலும், இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.3000/-மும், இரண்டாம் பரிசாக ரூ.2000/-மும், மூன்றாம் பரிசாக ரூ.1000/-மும்,  மொத்தத் தொகை முதல் பரிசு ரூ.26,49,000/- இரண்டாம் பரிசு ரூ-17,66,000/-  மூன்றாம் பரிசு ரூ.8,85,000/- மொத்தமாக ரூ.53 லட்சம் பரிசுத் தொகை அவரவர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். இப்போட்டிகளில் வெற்றிப் பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது. மேலும் மாநில அளவிலான போட்டிகளுக்கு 356 ஆண்களும் 350 பெண்களும் என 76 நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்" என உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன் தெரிவித்தார். நிகழ்ச்சியில், தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் நித்யா, கல்லூரி கல்வி இணை இயக்குநர் குணசேகரன், முதன்மைக் கல்வி அலுவலர் இ.மாதவன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ஜெ.டேவிட் டேனியல், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் பெ.கற்பகம், மாவட்ட கூடைப்பந்து பயிற்றுநர் க.பாபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story