மக்களை தொந்தரவுப்படுத்தி விஜயின் பிரசாரம் இருந்தது அமைச்சர் சா.சி.சிவசங்கர்

மக்களை தொந்தரவுப்படுத்தி விஜயின் பிரசாரம் இருந்தது அமைச்சர் சா.சி.சிவசங்கர்
X
அரியலூரில் விஜயின் பிரச்சாரத்தின் போது மக்களை தொந்தரவு படுத்தும் சூழலில் இருந்ததாக போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் சிவசங்கர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
அரியலூர்,செப். 15- மக்களை தொந்தரவுப்படுத்தி விஜயின் பிரசாரம் இருந்தது என்றார் போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர். ஓரணியில் தமிழ்நாடு பரப்புரை குறித்து அரியலூரில் ஞாயிற்றுக்கிழமை அவர் அளித்த பேட்டி: கடந்த ஜூலை 1 ஆம் தேதி தொடங்கிய ஓரணியில் தமிழ்நாடு எனும் முன்னெடுப்பு மூலம் தமிழ்நாடு முழுவதும் 1 கோடிக்கும் மேலான குடும்பங்கள் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். திமுக ஆட்சி செயல்படுத்தும் திட்டங்களை அவர்கள் வரவேற்கிறார்கள். தமிழர் பண்பாட்டை சீர்குலைத்தும், மண் மொழி, மானத்தை அவமதிக்கின்ற வகையிலும் செயல்படும் மத்திய அரசையும், பாஜகவையும் எதிர்த்து இந்த ஓரணியில் தமிழ்நாடு தொடங்கப்பட்டது. ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பில் இணைந்த குடும்பங்களை ஒன்றிணைத்து ஐந்து உறுதிமொழிகள் எடுக்கப்பட உள்ளன. மேலும், திமுகவின் முப்பெரும் விழாவில் அரியலூர் மாவட்டத்தில் இருந்து பெருந்திரளானோர் கலந்து கொள்வோம். அங்கு அனைவரும் உறுதிமொழி எடுக்கவுள்ளோம். வரும் 20 ஆம் தேதி ஓரணியில் தமிழ்நாடு விளக்க பொதுக்கூட்டமும் நடத்தப்பட உள்ளது. தமிழ்நாட்டை தலைகுனிய விட மாட்டோம் என்ற தலைப்பை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் விதமாக செயல்பாடுகளை முன்னெடுப்போம் என்றார். தொடர்ந்து, விஜயின் பரப்புரை குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் அளித்த பதில், திரைப்படங்களில் கதாநாயகர்கள் வீரவேசமாக பேசுவார்கள். அப்படி அவர்கள் பேசுவதற்கு இயக்குநர்கள் வசனம் எழுதித் தருவர். அதை உதவி இயக்குநர்கள் சொல்லித் தருவர். இயக்குநர்கள் எழுதிக் கொடுத்ததை, உதவி இயக்குநர்கள் சொல்லித் கொடுத்ததை போல் விஜய் பேசியதாக நான் நினைக்கிறேன். மருதையாற்றின் குறுக்கே வாரணவாசியில் தடுப்பணைக் கட்டுவதற்கு கடந்த முறை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அரியலூர் வந்த பொழுது அறிவிப்பு வெளியிடப்பட்டு, தற்போது டெண்டர் விடப்படும் பணிகள் தொடங்கும் சூழலில் உள்ளது. முந்திரி பதப்படுத்தும் பூங்கா பரணம் கிராமத்தில் அமைக்கப்பட அறிவிப்பு வெளியிடப்பட்டுவிட்டது. ஒவ்வொரு மாதமும் எத்தனை புதிய பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன என்பதும், பேருந்து போகாத கிராமங்கள் கண்டறிந்து அந்த வழித்தடங்களில் பேருந்து வழித்தடங்களை நீட்டிப்பு செய்வதும், புதிய பேருந்துகளை சேவைக்கு அர்ப்பணித்தும் வருகின்றோம். அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்தில் ஏறக்குறைய 200 வழித்தடங்களில் பேருந்து சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் குளிர்சாதன பேருந்து வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. புதிய பேருந்து வழித்தடங்களை ஏற்படுத்திக் கொடுத்திருப்பது பொதுமக்கள் அனைவரும் தெரிந்து கொண்ட ஒன்று. இந்தக் குற்றச்சாட்டு என்பது உண்மை தெரியாமல், அரசியல் தெரியாமல் ஏதோ வந்தோம் பேசினோம் என்பதற்காக விஜய் பேசியதாக உள்ளது. அவர் எவ்வளவு நேரம் பேசினார் என்பதை பார்த்தாலே, அவரது சரக்கு என்ன என்பது தெரிந்து விட்டது. அவர் இன்னும் நடிகர் மனப்பான்மையிலிருந்து மாறவில்லை. அவரைப் பார்க்க வருபவர்களும் ரசிகர் மனநிலையில் இருந்து இன்னும் மாறவில்லை என்பதே அவரது பயணம் தெரிவிக்கிறது. அண்ணாசிலை மாத்திரமல்ல செல்லும் இடத்தில் எம்ஜிஆர் சிலை மீதும் ஏறி அமர்ந்து தொண்டர்கள் பார்க்கும் காட்சியை பார்த்துக் கொண்டிருக்கிறோம். அவர் செல்லும் இடங்கள் எல்லாம் முதலில் மேலே ஏறி இருக்கிறவர்களை கீழிறங்கச் சொல்வதே அவரது வேலையாக உள்ளது. அவர் கட்டுப்பாட்டோடு கட்சியை நடத்த கற்றுக் கொள்ள வேண்டும். எந்தக் கட்சியாக இருந்தாலும் அந்த தலைவர்களை வரவேற்க, மக்கள் எப்படி நிற்பர் என்பது எல்லாருக்கும் தெரியும். இப்பொழுது எதிர்க்கட்சியாக இருப்பவர்களுக்கு கூட உதாரணத்துக்கு சொல்வேன்.தலைவரை வரவேற்க சாலையின் இரு புறங்களிலும் மக்கள் நிற்பர்.  அவர்கள் நேற்று செய்திருப்பது செயல் திட்டமிட்டு செய்யப்பட்டது. அவர்களது செயல் விரைவிலேயே மக்கள் மத்தியில் வெளிப்படும்.கூட்டம் இருப்பதாக காட்டுவதற்காகவே, மக்கள் வரவேற்பு அளித்தார்கள் என்று சொல்வதற்காகவே, மக்களுக்கு தொந்தரவு தருவது போல விஜயின் பிரசாரம் செயல் உள்ளது. விரைவில் அது வெளிப்படும் என்றார்.
Next Story