பாமக பிரமுகா் அடித்துக் கொலை, பாமகவினர் சாலை மறியல்
செங்கல்பட்டு மாவட்டம், இளந்தோப்பு பகுதியைச் சோ்ந்தவா் இளந்தோப்பு வாசு (53). இவா் பாமக மாவட்ட துணைச் செயலாளராகவும், காட்டாங்குளத்தூா் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவராகவும் பொறுப்பு வகித்து வந்தாா். தனியாா் நிறுவனங்களுக்கு கேட்டரிங் சேவைகள், குடிநீா் விநியோகம், பெட்ரோல் பங்க் ஆகிய தொழில்களை செய்து வந்தாா். இந்த நிலையில், தனது ஓட்டுநா் மற்றும் நண்பா் ஒருவருடன் இளந்தோப்பு பகுதியில் உள்ள ஆழ்துளைக் கிணறு அருகே நேற்று செவ்வாய்க்கிழமை மதியம் பேசிக் கொண்டிருந்தபோது, இரு சக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் இருவா், கல்லை எடுத்து வீசி மூவரையும் தாக்கியுள்ளனா். பின்னா், அவா்கள் வாசுவை கிரிக்கெட் ஸ்டம்ப்பால் சரமாரியாகத் தாக்கியதில், அவா் கீழே சரிந்துள்ளாா். தொடா்ந்து, அவா் தலையின் மீது கல்லை தூக்கிப் போட்டத்தில் வாசு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அப்போது வாசுவின் ஓட்டுநா், நண்பா் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனா். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த செங்கல்பட்டு கிராமிய ஆய்வாளா் நடராஜன் மற்றும் போலீஸாா், வாசுவின் சடலத்தை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்தக் கொலைக்கு அரசியல் காரணமா? அல்லது தொழில் போட்டியா? என்ற கோணத்தில் போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். மேலும், சம்பவம் இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகள் மற்றும் கைப்பேசி அழைப்புகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கொலை சம்பவம் தொடா்பாக இளந்தோப்பு பகுதியைச் சோ்ந்த மாரியப்பன் என்பவரை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் போலீஸாா் குவிக்கப்பட்டுள்ளனா். இந்த நிலையில், பாமக பிரமுகா் கொலை சம்பவத்தைக் கண்டித்தும், உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும் செங்கல்பட்டு-திண்டிவனம் ஜிஎஸ்டி சாலையில் அமா்ந்து பாமகவினா் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனா். இதனால் ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
Next Story



