ஸ்ரீ ராஜவிநாயகர் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம்

X
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நடேசன் நகர் அருள்மிகு ஸ்ரீ ராஜவிநாயகர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. 1936 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இத்திருக்கோவில், அப்பகுதியில் பழமை வாய்ந்த புகழ்பெற்ற ஸ்ரீ விநாயகர் ஆலயங்களில் ஒன்றாகும். விழாவையொட்டி காலை வேளையில் கணபதி ஹோமம், ஸ்ரீ லட்சுமி பூஜை ஹோமம், நவக்கிரக ஹோமங்கள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு காலயாக பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னர் நாடிசந்தானம், தீபாராதனை நிகழ்வுகள் நடைபெற்றன. தொடர்ந்து யாகசாலையிலிருந்து கடம் புறப்பாடு நடத்தப்பட்டு, அமராவதி ஆறு, சண்முகா நதி, திருமூர்த்தி மலை, காசி தீர்த்தம், கங்கா தீர்த்தம் உள்ளிட்ட புனித நதிகளில் இருந்து புனித நீர் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, அருள்மிகு ஸ்ரீ ராஜவிநாயகருக்கு கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. பின்னர் கோயில் ராஜகோபுர கலசத்தில் மகா கும்பாபிஷேக தீர்த்தம் ஊற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து புனித தீர்த்தம் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டு அனைவரும் ஆசீர்வதிக்கப்பட்டனர். இந்த கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு தாராபுரம், நடேசன் நகர், நஞ்சியம்பாளையம், குறிஞ்சி நகர், கவுண்டச்சிபுதூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் திரளாக வந்து சுவாமி தரிசனம் செய்து கும்பாபிஷேக சிறப்பினை அனுபவித்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள், விழா அமைப்பாளர்கள் மனோகரன், செல்லமுத்து, ஜெகதீசன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகத்தை தாராபுரம் அகதீஸ்வரர் கோவில் அர்ச்சகர் சுந்தரேஸ்வரர் ஆச்சாரியார் மற்றும் அரவிந்த் ஆச்சாரியார் முறையாக நடத்தி வைத்தனர்.
Next Story

