கோவை: டிசம்பரில் ஆளில்லா விமானம் செலுத்தப்படும் - இஸ்ரோ தலைவர் !

X
இஸ்ரோ தலைவர் நாராயணன், கோவையில் தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்தார். இந்நிலையில் நேற்று விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பிரதமர் நரேந்திர மோடி 2018ல் அறிவித்த ககன்யான் திட்டம் வேகமாக முன்னேறி வருவதாக தெரிவித்தார். இந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில், வயோமித்ரா எனும் எந்திர மனிதரை கொண்ட ஆளில்லா விண்கலம் அனுப்பப்படும். இதை தொடர்ந்து, மேலும் இரண்டு ஆளில்லா சோதனை ராக்கெட்டுகள் ஏவப்பட்டு, 2027 மார்ச் மாதத்தில் மனிதர் பங்கேற்பு கொண்ட விண்வெளிப் பயணம் மேற்கொள்ளப்படும். ககன்யான் திட்டத்தில் 85% சோதனைகள் நிறைவு பெற்றுள்ளதாகவும், விபத்து ஏற்பட்டால் விண்வெளி வீரர்களை பாதுகாப்பாக மீட்கும் தொழில்நுட்பமும் பரிசோதிக்கப்படுவதாகவும் கூறினார். இதில் ஏரோ, கடற்படை உள்ளிட்ட பல துறைகள் இணைந்து பணிபுரிகின்றன என்றும் தெரிவித்தார். உலகளவில் இந்தியா விண்வெளித் துறையில் முன்னணியில் இருப்பதாகவும், நிலா மற்றும் செவ்வாய் ஆராய்ச்சிகளில் இந்தியா சாதனை படைத்துள்ளதாகவும் அவர் நினைவூட்டினார். மாணவர்கள் விண்வெளி ஆராய்ச்சியில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர் என்றும் கூறினார். மேலும், விண்வெளித் துறையிலும் ஏஐ தொழில்நுட்பம் பரவலாக பயன்படுத்தப்படுவதாகவும், வயோமித்ரா மற்றும் எதிர்கால சந்திராயன் 4 திட்டத்தில் மாதிரி சேகரிப்புக்கு ஏஐ ரோபோ பயன்படுத்தப்படும் என தெரிவித்தார்.
Next Story

