தஞ்சாவூரில் மிஷன் ரேபிஸ் வெறி நோய் தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் துவக்கி வைத்தார்.

X
தஞ்சாவூர் மாவட்டம், கால்நடை பராமரிப்பு துறை சார்பில், தஞ்சாவூர் மாநகராட்சி வார்டு எண்: 1 பள்ளியக்கிரஹாரத்தில் மிஷன் ரேபிஸ் வெறி நோய் தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்து வெள்ளிக்கிழமை துவக்கி வைத்தார். தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி, திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகரன், தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.இராமநாதன், துணை மேயர் மரு.அஞ்சுகம் பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது. தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறை, SPCA - தஞ்சாவூர் மாவட்டம் மற்றும் மிஷன் ரேபிஸ், கோவா இணைந்து 'ரேபிஸ் இல்லா தஞ்சாவூர் உருவாக்க திட்டமிடப்பட்டு, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து சமுதாய நாய்கள் மற்றும் வளர்ப்பு நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி பணி இலவசமாக மேற்கொள்ளப்பட உள்ளது. அதன் முதற்படியாக, தஞ்சாவூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு எண்- 1 பள்ளியக்கிரஹாரத்தில் வெறிநோய் தடுப்பூசி பணி முகாம் தொடங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 24,500 சமுதாய நாய்கள் உட்பட 60 ஆயிரம் நாய்களுக்கும் வெறிநோய் தடுப்பூசி போடப்பட உள்ளது. இதற்காக நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட நாய் பிடிப்பாளர்களால், ஒவ்வொரு தெருவிலும் நாய்கள் வலை போட்டு பிடிக்கப்பட்டு, தடுப்பூசி செலுத்தி, நெற்றியில் அடையாளமிட்டு விடுவிக்கப்படும். மேலும், SPCA - தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள விலங்குகள் இனப்பெருக்க கட்டுப்பாடு மையத்தின் மூலமும், நாளது தேதி வரை 3973 சமுதாய நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மற்றும் வெறிநோய் தடுப்பூசி ஆகியவை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 'ரேபிஸ் இல்லா தஞ்சாவூர்' திட்டம் படிப்படியாக மாவட்டம் முழுவதும் விரிவுபடுத்தப்பட உள்ளது. எனவே பொதுமக்கள் இத்திட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டு கொள்ளப்படுகிறார்கள். மேலும் வெறிநோய் தொடர்பான ஏனைய தகவல்களுக்கு 24 மணி நேர தொலைபேசி எண் 8110070701-ஐ தொடர்பு கொண்டு பொதுமக்கள் பயன்பெறலாம்" என்றார். இம்முகாமில் கால்நடை துறை மண்டல இணை இயக்குநர் மரு.மா.பாஸ்கரன், வருவாய் கோட்டாட்சியர் ப.நித்யா, உதவி இயக்குநர் மரு.பா.சரவணன், மரு.இரா.ஏஞ்சலா சொர்ணமதி, SPCA கால்நடை மருத்துவர் மரு.ஆர்.செல்வகுமார், முதுநிலை கால்நடை மேற்பார்வையாளர் ஞானசேகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story

