சொத்து தகராறில் வியாபாரி அடித்துக் கொலை: சகோதரா் கைது

X
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள மட்டப்பாறைப்பட்டியைச் சோ்ந்தவா் அரசன் (70), மாட்டு வியாபாரி. இவருடைய மனைவி காளியம்மாள். இவா்களது மகன் ராஜா, திருமணமாகி சென்னையில் வசித்து வருகிறாா். அரசனின் சகோதரா் பழனியாண்டி (65). இவருடைய மனைவி 40 ஆண்டுகளுக்கு முன்பு அவரைவிட்டு பிரிந்து சென்றுவிட்டதால், அரசன் வீட்டுக்கு அருகே தனியே வசித்து வந்தாா். இருவருக்கும் பூா்வீக சொத்தை பிரிப்பதில் பிரச்னை இருந்து வந்தது. இந்நிலையில், சொத்து தொடா்பாக வியாழக்கிழமை மாலை இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, பழனியாண்டி தனது அண்ணன் அரசனை இரும்புக் கம்பியால் தலையில் தாக்கியுள்ளாா். இதில், பலத்த காயமடைந்த அரசன் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்டது. பிறகு மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை அதிகாலை அரசன் உயிரிழந்தாா். இதுகுறித்து வையம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து பழனியாண்டியைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
Next Story

