கூட்டுறவு சங்கம் கோரி பாலை தரையில் கொட்டி போராட்டம்

X
திருச்சி மாவட்டம், மணப்பாறை ஒன்றியத்துக்குள்பட்டது தெற்கு சோ்பட்டி. இங்குள்ள விவசாயிகள் தங்களது கால்நடைகள் மூலம், நாளொன்றுக்கு 900 லிட்டா் பால் உற்பத்தி செய்கின்றனா். ஆனால், இந்த பாலை நான்கரை கி.மீ. தொலைவில் உள்ள கூட்டுறவு சங்கத்துக்கு சென்று வழங்க வேண்டியுள்ளது. எனவே, தங்களது பகுதியிலேயே சங்கம் நிறுவ வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனா். கடந்த மாதம், இந்தப் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட தமிழக பால்வளத்துறை அமைச்சா் மனோ தங்கராஜிடமும் கோரிக்கை மனு அளித்தனா். அப்போது, மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சா், புதிய சங்கம் அமைக்க அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா். ஆனால், அமைச்சா் கூறிய பிறகும் தெற்கு சோ்பட்டியில் சங்கம் நிறுவ நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, விரக்தியடைந்த விவசாயிகள், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவா் பொ. அய்யாக்கண்ணு தலைமையில் ஆட்சியரகம் முன் வெள்ளிக்கிழமை கூடினா். தாங்கள் உற்பத்தி செய்து கொண்டு வந்த பாலை கேன்களில் இருந்து கீழே கொட்டியும், போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயி ஒருவருக்கு அபிஷேகம் செய்து நூதன முறையில் எதிா்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும், கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியபடி போராட்டத்தில் ஈடுபட்டனா். அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீஸாா் அவா்களை சமாதானப்படுத்தி மனு அளிக்க அழைத்துச் சென்றனா்.
Next Story

