தமிழிசை சௌந்தரராஜன் கோவை வருகை – திமுக, கமல், விஜய் மீது கடும் விமர்சனம் !

X
கோவையில் நடைபெற்ற மோடி தொழில் மகள் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த தமிழிசை சௌந்தரராஜன், விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருப்பதாகவும், இதுபோன்ற பிரச்சனைகள் நடக்கும்போது திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் காசா போரைப் பற்றி மட்டுமே பேசுகின்றன என்றும் அவர் குற்றம்சாட்டினார். பிரதமர் மோடி தமிழுக்கும் தமிழருக்கும் அங்கீகாரம் அளித்து வருகிறார் என புகழ்ந்த தமிழிசை, திராவிடக் கட்சிகளை எதிர்த்து தான் அரசியல் நடத்துவேன் எனவும், திமுக மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டதாகவும் சாடினார். மக்கள் நீதி மய்யம் தேர்தல் ஆணைய அங்கீகாரம் இழந்துவிட்ட நிலையில், கமல்ஹாசனின் திமுக கூட்டணியை அவர் “சுயநல அரசியல்” எனக் குறிப்பிட்டார். சரத்குமார் கட்சியை பாஜகவுடன் இணைத்தது கமலுடன் ஒப்பிட முடியாது என்றும் தெரிவித்தார். திருமாவளவனுக்கு திமுகவிற்கு எதிராக நிற்கும் திராணி இல்லை என விமர்சித்த தமிழிசை, விஜய் நல்ல நடிகர், நன்றாக பேசுபவர் ஆனால் அரசியல் போராட்ட அனுபவம் இல்லாதவர் என்றார். விஜயின் வருகை திமுக எதிர்ப்பை அதிகரிக்கலாம், ஆனால் 2026 தேர்தலில் திமுகவை வீட்டுக்கு அனுப்புவது பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் கடமையாகும் என்றும் வலியுறுத்தினார். சீமான் உட்பட யாரும் ஒருமையில் பேசக் கூடாது என அவர் எச்சரித்தார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நோக்கி, “பேப்பர் இல்லாமல் பேசச் சொல்லுங்கள் யாருக்கு அறிவு குறைவு என தெரிய வரும்” என்று கடுமையாக சாடினார். மேலும், யூடியூப் இன்ஃப்ளூயன்சர்களை அரசியல் விழாக்களில் பயன்படுத்துவதை கிண்டலடித்தார். “2026 தேர்தலில் திமுகவுக்கு இடமில்லை, மக்கள் அவர்களை வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள்” என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
Next Story

