இஸ்லாமியர்களுக்கு இடர் வந்தால் திமுக துணை நிற்கும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி

நபிகள் நாயகம் 1500 ஆவது பிறந்தநாள் விழா இன்று சென்னையில் கொண்டாடப்பட்டது. இதில் கலந்துகொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ''இஸ்லாமியர்களுக்கு இடர் வந்தால் திமுக துணை நிற்கும்'' என்று உறுதி அளித்து பேசினார்.
நபிகள் நாயகம் 1500 ஆவது பிறந்தநாள் விழா சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (செப்டம்பர் 21) கொண்டாடப்பட்டது. விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசியதாவது, நபிகள் நாயகம் 1500 ஆவது பிறந்தநாள் விழா நிகழ்ச்சியோடு பல்வேறு கோரிக்கைகளை எடுத்து வைக்கக்கூடிய விழாவாக நடந்துள்ளது. மனித குலத்தின் மேன்மைக்கான நற்பண்புகளை வலியுறுத்திய நபிகள் நாயகத்தின் 1500 ஆவது பிறந்தநாள் விழாவில் பங்கெடுத்து உங்கள் எல்லோரையும் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். பெருமைப்படுகிறேன். மதம் என்பதை நிறுவனமாக பார்க்காமல் 'மார்க்கம்' என்று பார்ப்பவர்கள் நீங்கள். அந்த மார்க்கம் அன்பு மார்க்கமாக இருக்க வேண்டும் என்பதைத் தான் நபிகளார் போதித்தார். வலியுறுத்தினார். அண்ணாவும் - மறைந்த முதலமைச்சர் கருணாநிதியும் முதன்முதலாக சந்தித்ததே, திருவாரூரில் நடந்த மிலாது நபி விழாவில் தான். அதன் பிறகு அவர்களுக்கிடையில் உருவான அன்பு தான் இன்றைய தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான அடித்தளம். பல தலைவர்கள் கூடியிருக்கும் இந்த ஒற்றுமை எந்நாளும் நீடிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஒற்றுமை தான் கொள்கைகளில் வெற்றி பெறுவதற்கான முதல் படி. பழமைவாத அடக்குமுறைகளை எதிர்த்து, ஏழைகள் மீது கருணை பொழிந்து பணக்காரர்களிடம் இருக்கும் பணம், மற்றவர்களுக்கும் தர வேண்டியது, உனது நடத்தை மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியவர் நபிகளார். சமத்துவத்தை வலியுறுத்திய சிந்தனையாளர். வரலாற்றில் சிலர் தான் ஒட்டுமொத்த மனிதச் சமுதாயத்தின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய ஆற்றலை, வாய்ப்பை பெற்றவர்கள். அப்படிப்பட்டவர் தான் நபிகள் பெருமான். அதனால் தான் பெரியார், அண்ணா, மறைந்த முதலமைச்சர் கருணாநிதி ஆகியோர் நபிகளார் சொன்ன சமத்துவத்தை, அன்பை புகழ்ந்தார்கள். மறைந்த முதலமைச்சர் கருணாநிதி நபிகள் பெருமானாரின் வாழ்வை மூன்றே வரிகளில் எடுத்துச் சொன்னார். எப்படி என்றால், “நபிகள் நாயகம் அன்பை, அமைதியை போதித்தார். அறத்தை வலியுறுத்தினார். அடுத்தவருக்கு உதவிகள் புரிவதை உயர்ந்த பண்பாக கருதினார். அடுத்தவர் நலன் கருதி ஆற்றும் அருட்பணிகளே அறம் என வலியுறுத்தினர் என்று மறைந்த முதலமைச்சர் கருணாநிதி சொன்னார். அப்படிப்பட்ட நபிகளாரின் 1500 ஆவது பிறந்த நாளில் காசாவில் நடத்தப்பட்டு வரும் துயரத்தை பார்த்து மனசாட்சி உள்ள யாரும் கவலைப்படாமல் இருக்க முடியாது. இதற்கு விரைவில் ஒரு நல்ல தீர்வு ஏற்பட வேண்டும். உடனடியாக பாலஸ்தீன மக்கள் அனுபவித்து வரும் கொடுமைகளும் முடிவிற்கு வர வேண்டும். அதற்கு ஒன்றிய அரசு உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று நான் ஏற்கனவே பதிவு செய்திருக்கிறேன். மீண்டும் ஒருமுறை இந்த நிகழ்ச்சியின் மூலமாக நான் வலியுறுத்துகிறேன். மறைந்த முதலமைச்சர் கருணாநிதி 1969 லேயே மிலாது நபிக்கு, அரசு விடுமுறை என்று அறிவித்தார். அதை 2001 இல் அதிமுக ரத்து செய்ததும், மறுபடியும் 2006 இல் திமுக ஆட்சியில் விடுமுறை வழங்கியது என தெரிவித்தார்.
Next Story