கடைக்குள் புகுந்த அரசு பஸ்: அதிர்ஷ்டவசமாக தப்பிய பயணிகள்

கடைக்குள் புகுந்த அரசு பஸ்: அதிர்ஷ்டவசமாக தப்பிய பயணிகள்
X
எட்டயபுரம் அருகே சாலையோர கடைக்குள் புகுந்த அரசு பஸ்: அதிர்ஷ்டவசமாக தப்பிய பயணிகள்
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை நோக்கி புறப்பட்டு வந்து இந்த பஸ்சை ஓட்டப்பிடாரம் இந்திரா நகரை சேர்ந்த சொரிமுத்து (வயது 48) என்பவர் ஓட்டினார். பஸ்சில் 40 பயணிகள் இருந்தனர். இந்த பஸ் நேற்று அதிகாலை எட்டயபுரம் அருகே உள்ள எம்.கோட்டூர் விலக்கு அருகே வந்தபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. டிரைவர் சொரிமுத்து எவ்வளவோ முயற்சி செய்தும் தறிகெட்டு ஓடிய பஸ் இடதுபுறம் சாலையோரத்தில் இருந்த இருசக்கர வாகனம் பழுதுபார்க்கும் கடைக்குள் புகுந்தது. இதனால் அந்த கடையின் தகர மேற்கூரையானது பஸ்சின் முன்பக்க கண்ணாடியை உடைத்துக்கொண்டு உள்ளே குத்தியது. இதில் அந்த பஸ் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் பஸ்சில் இருந்த டிரைவர் சொரிமுத்து படுகாயமடைந்தார். அதிர்ஷ்டவசமாக 40 பயணிகளும் எவ்வித காயமும் இன்றி உயிர் தப்பினர். ஆனால் பயணிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். இந்த விபத்தில் கடையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 3 மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்தன. இதுகுறித்து தகவல் அறிந்ததும் எட்டயபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று படுகாயமடைந்த அரசு விரைவு பஸ் டிரைவர் சொரிமுத்துவை மீட்டு சிகிச்சைக்காக எட்டயபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். மேலும் விபத்து குறித்து எட்டயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story