கோவை, தொண்டாமுத்தூரில் யானை தொல்லை: முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை !

மனித–யானை மோதல் அதிகரிப்பு: முன்னாள் அமைச்சர் எச்சரிக்கை.
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதி தேவராயபுரம் பகுதியில் யானை மனித மோதல்கள் அதிகரித்து வருகின்றன. ரோலக்ஸ் என்ற காட்டு யானையை பிடிக்க முயன்ற வனத்துறையினர் நடவடிக்கையில் ஈடுபட்டபோது, ஆனைமலை புலிகள் காப்பக வன கால்நடை மருத்துவர் விஜயராகவன் யானையால் தாக்கப்பட்டு கடந்த வாரம் படுகாயம் அடைந்தார். தற்போது அவர் சிகிச்சை பெற்று வருகிறார். முன்னாள் அமைச்சர் மற்றும் தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. வேலுமணி நேரில் அவரது நிலையை விசாரித்து, தொடர்ச்சியான யானை தொல்லையை தடுக்க தமிழக அரசு நிரந்தர தீர்வுகள் எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். குறிப்பாக, கர்நாடகாவில் உள்ள தடுப்பு வேலிகள் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கோவையில் அமல்படுத்தப்பட வேண்டுமென அவர் கோரினார். மேலும், வனத்துறைக்கு தேவையான உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும், யானை மனித மோதல் பிரச்சனையை கையாள மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அதிமுக ஆட்சியின்போது முன்வைத்த திட்டங்களை அரசு செயல்படுத்தாமல் உள்ளதாக குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். கோவை பகுதியில் பாலங்கள் மற்றும் சாலை பணிகளை வேகமாக முடிக்கவும், யானைகள் தாக்கி உயிர் நாசம் ஏற்படாமல் பாதுகாப்பு ஏற்படுத்தவும் அரசு முனைப்பாக செயல்பட வேண்டும் எனவும் எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார்.
Next Story