மாணவர்களால் அடுத்த தலைமுறை வாழ்க்கை மாறும் : ஆட்சியர்.

X
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டம் இலக்குமி ஆலை மேல்நிலைப் பள்ளியில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் பள்ளிக்கல்வித் துறை இணைந்து "உயர்வுக்கு படி" இரண்டாம் கட்ட வழிகாட்டி முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், 12ஆம் வகுப்பு முடித்து உயர்கல்வியில் சேராத மாணவர்களுடன் கலந்துரையாடினார். தொழில்நுட்பக் கல்வி, கலை–அறிவியல், தொழில்பயிற்சி படிப்புகள், வேலைவாய்ப்பு வாய்ப்புகள் குறித்து மாணவர்களுக்கு விரிவான வழிகாட்டுதலையும் வழங்கினார். பின்னர் அவர் உரையாற்றியதாவது: “கல்லூரியில் சேர்வது மாணவர்களின் அடுத்த தலைமுறை வாழ்க்கையையே மாற்றும். கடந்த 5 மாதங்களில் மேற்கொண்ட முயற்சிகளின் விளைவாக, தூத்துக்குடி மாவட்டத்தில் 95% மாணவர்கள் உயர்கல்வியில் சேர்ந்து உள்ளனர். சுமார் 20 பள்ளிகளில் 100% சேர்க்கை எட்டப்பட்டுள்ளது. மாநில அரசு கல்விக்குப் பிரத்யேக முக்கியத்துவம் கொடுத்து பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ‘புதுமைப்பெண்’, ‘தமிழ்புதல்வன்’, கட்டணமில்லா பேருந்து அட்டைகள், சமூக நீதி விடுதிகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் மாணவர்களுக்கு பெரும் பலனளிக்கின்றன. மேலும், முதலமைச்சர் அறிவித்த ‘நான் முதல்வன்’ திட்டமும் மாணவர்களின் திறன் மேம்பாட்டுக்கு உதவுகிறது,” என்றார். இந்த நிகழ்ச்சியில் கோவில்பட்டி, கயத்தார், விளாத்திக்குளம், புதூர் ஒன்றியங்களைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.
Next Story

